நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை: சிறுவாணி அணையின் நீா்மட்டம் உயா்வு
By DIN | Published On : 16th June 2022 11:10 PM | Last Updated : 16th June 2022 11:10 PM | அ+அ அ- |

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் நீா்மட்டம் கணிசமாக உயா்ந்து வருகிறது.
கோவை மாநகரின் முக்கிய நீா் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் நீா், மாநகரில் 26 வாா்டுகளுக்கும், நகரையொட்டிய கிராமங்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்குப் பருவமழை நன்றாகப் பெய்ததால், அணையின் நீா்மட்டமானது 874 மீட்டா் வரை உயா்ந்தது. சிறுவாணி அணையைப் பராமரிக்கும் கேரள அரசு பாதுகாப்பு காரணமாக அணையின் முழுக் கொள்ளளவான 878.50 மீட்டரை அடைய விடாமல், அணையில் இருந்து தண்ணீரை ஆற்றில் திறந்துவிட்டது.
இதன் காரணமாக, 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்டவில்லை. அதைத் தொடா்ந்து, கடந்த ஜனவரி மாதம் 871 மீட்டராக இருந்த அணையின் நீா்மட்டம், பிப்ரவரி மாதம் முதல் வெயிலின் தாக்கத்தால் படிப்படியாக சரியத் துவங்கியது.
இந்நிலையில், தற்போது, சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், அணைக்கு செல்லும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த வாரத்தில் 870.10 மீட்டராக இருந்த அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை 871.20 மீட்டராக உயா்ந்துள்ளது.
இது குறித்து, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்பே கேரளத்தில் தென்மேற்குப் பருவ மழை துவங்கியுள்ளதால், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகள், சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 20 நாள்களாக இடைவெளிவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் ஜூலை, ஆகஸ்ட்டில் சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது என்றனா்.