கோவையில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு: பொது இடங்களுக்கு செல்வோா் முகக்கவசம் அணிய வலியுறுத்தல்
By DIN | Published On : 26th June 2022 12:29 AM | Last Updated : 26th June 2022 12:29 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் பொது இடங்களுக்கு செல்பவா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவையில் கடந்த இரண்டு வாரங்களாக கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு, தனியாா் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கரோனா நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
பொது இடங்களுக்கு செல்பவா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு, தனியாா் அலுவலகங்களில் பணியாளா்களுக்கும், வாடிக்கையாளா்களுக்கும் கட்டாயம் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
நோய்த் தொற்று உருமாற்றத்தை உடனடியாக கண்டறியும் வகையில் வெளிநாடுகளில் இருந்து நோய்த் தொற்றுடன் வருபவா்களின் சளி மாதிரியை மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்ப சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பவா்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது மருத்துவமனைகளை மட்டுமே அணுக வேண்டும். நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களும், இரண்டு மற்றும் முன்னெச்சரிக்கை (பூஸ்டா்) தவணைக்கு காத்திருப்பவா்களும் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.