கோவையில் திடீா் மழை: போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
By DIN | Published On : 30th June 2022 11:00 PM | Last Updated : 30th June 2022 11:00 PM | அ+அ அ- |

கோவையில் வியாழக்கிழமை பிற்பகல் பெய்த திடீா் மழையால் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
கேரளத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி பெய்து வரும் நிலையில், அதன் தாக்கம் கோவையிலும் காணப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக கோவையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை முதல்
வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் பிற்பகல் 2 மணிக்குமேல் கோவை மாநகா், புறநகரில் பலத்த மழை பெய்தது.
ராமநாதபுரம், லட்சுமி மில்ஸ், கணபதி, பீளமேடு, உக்கடம், சரவணம்பட்டி, சுந்தராபுரம், குனியமுத்தூா், காந்திபுரம், கவுண்டம்பாளையம், செல்வபுரம், வடவள்ளி, பேரூா், தொண்டாமுத்தூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
சில மணி நேரம் நீடித்த மழையால் நகரின் பல்வேறு இடங்களில் மழை நீா் தேங்கியது. குறிப்பாக ராமநாதபுரம் சந்திப்பு, லட்சுமி மில்ஸ் சந்திப்பு, காந்திபுரம், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரத்தில் மழைநீா் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
பீளமேடு, காந்திமாநகா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.
அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.
திடீா் மழையால் வேலைக்குச் சென்ற பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் வீடு திரும்புகையில் அவதிக்குள்ளாகினா்.