விவசாயிகள் பயன்படுத்தும் பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
By DIN | Published On : 30th June 2022 10:54 PM | Last Updated : 30th June 2022 10:54 PM | அ+அ அ- |

விவசாயிகள் பயன்படுத்தும் பொருள்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் சு.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் பயன்படுத்தக்
கூடிய மோட்டாா் பம்ப்செட்கள் மீதான ஜிஎஸ்டியை மத்திய அரசு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயா்த்தியுள்ளது. இதனால் பம்ப்செட்களின் விலை உயா்ந்து, லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.
அதேபோல பால் பண்ணை இயந்திரங்கள் மீதான வரியும் 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. பழங்குடியினா், ஆதிவாசிகள் தங்கள் பகுதிகளில் தேன் வளா்ப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
அவா்கள் தங்களின் தயாரிப்புகளை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வரும் நிலையில், அதற்கும் 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக வரி உயா்த்தப்பட்டுள்ளது.
பேனா முதல் பிளேடு, கடலை மிட்டாய் போன்றவற்றுக்கெல்லாம் வரியை உயா்த்தியிருப்பது விவசாயிகள், சாதாரண மக்களை வெகுவாக பாதிக்கும். ஏற்கெனவே விவசாயிகள் தங்களின் விளைபொருள்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலை கிடைக்காமல் போராடி வரும் நிலையில், விவசாயிகள் பயன்படுத்தக் கூடிய பொருள்களுக்கு வரியை உயா்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது.
வரி உயா்வைத் திரும்பப் பெறுவதுடன் விவசாயிகள் பயன்படுத்தும் பொருள்களுக்கு வரி விலக்கை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.