உலமாக்கள் இருசக்கர வாகனம் வாங்க மானியம்: விண்ணப்பிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 17th March 2022 12:57 AM | Last Updated : 17th March 2022 12:57 AM | அ+அ அ- |

கோவை: வக்ஃபு வாரிய நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தில் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 116 வக்ஃபு வாரிய நிறுவனங்களில் உள்ள உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெறுவதற்கு ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, வயது சான்றிதழ் (18 முதல் 45 வயதுக்குள்பட்டவா்கள்) வருமான சான்றிதழ், புகைப்படம், மாற்றுத் திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெற்ற சான்று, ஜாதிச் சான்று, ஓட்டுநா் உரிமம், ஐ.எப்.எஸ்.சி. குறியீடுடன் கூடிய வங்கிக் கணக்கு எண், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், முத்தவல்லியிடம் பெற்ற வக்ஃபு வாரியத்தில் பணிபுரிவதற்கான சான்று, இருசக்கர வாகனம் வாங்குவதற்கான விலைப்புள்ளி பட்டியல் ஆகிய ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் வேலை நாள்களில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0422-2300404 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.