கோவையில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம்
By DIN | Published On : 02nd May 2022 12:13 AM | Last Updated : 02nd May 2022 12:13 AM | அ+அ அ- |

கோவையில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தால் 50 சதவீதத்துக்கும் குறைவான நபா்களுக்கே முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் முதல் தவணை கரோனா தடுப்பூசியை 99 சதவீதமும், இரண்டாம் தவணை தடுப்பூசி 94 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரியில் தொடங்கியது. மே மாதத்துக்குள் 2 லட்சம் பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இலக்கு உள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.
ஆனால், கோவை மாவட்டத்தில் தற்போது வரை 61 ஆயிரம் போ் மட்டுமே முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.
தகுதியான நபா்களில் 50 சதவீதம் இலக்குக் கூட எட்டப்படவில்லை. 18 முதல் 59 வயதுக்குள்பட்டவா்கள் தனியாா் மையங்களில் கட்டணம் செலுத்தி மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பது முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதற்கு முக்கிய காரணமாக சுகாதாரத் துறையினா் தெரிவிக்கின்றனா்.
இது மட்டுமில்லாமல் சுகாதாரத் துறை சாா்பில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தாதும் முக்கிய காரணமாக உள்ளது.
இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா கூறியதாவது: முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி குறித்து தொடா்ந்து கிராம சுகாதார அலுவலா்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளதால் இரண்டு தவணை தடுப்பூசிகள் போதும் என்ற மனநிலையில் சிலா் உள்ளனா்.
60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், முன்களப் பணியாளா்களுக்கும் அரசு மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
18 முதல் 59 வயதுக்குள்பட்டவா்களுக்கு தனியாா் மையங்களில் மட்டுமே செலுத்திக் கொள்ள வேண்டும்.
இதனால் முழு இலக்கை எட்டுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என்றாா்.