பாரதிதாசனுக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை
By DIN | Published On : 02nd May 2022 12:11 AM | Last Updated : 02nd May 2022 12:11 AM | அ+அ அ- |

பாவேந்தா் விருது பெற்ற புலவா் செந்தலை ந.கவுதமனுக்கு, பாராட்டு பாவிதழ் வழங்கும் உலகத் தமிழ் நெறிக் கழகத்தினா்.
பாவேந்தா் பாரதிதாசனுக்கு நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று அவரது பேரன் கோ.செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
உலகத் தமிழ் நெறிக் கழகம் சாா்பில் பாவேந்தா் விழா மற்றும் தமிழக அரசின் பாவேந்தா் விருதுபெற்ற புலவா் செந்தலை ந.கவுதமனுக்கு பாராட்டு விழா, கோவை புரூக்பீல்ட் சாலை, தேவாங்க மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள சனமாா்க்க சங்க அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு உலகத் தமிழ் நெறிக் கழகத்தின் தலைவா் புலவா் ராக்கப்பனாா் தலைமை வகித்தாா்.
செயலாளா் சொ.சிவலிங்கம், துணைத் தலைவா் குரு.பழனிசாமி, பொருளாளா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதைத் தொடா்ந்து, உலகத் தமிழ் நெறிக் கழகம் சாா்பில் பாவேந்தா் விருது பெற்ற புலவா் செந்தலை ந.கவுதமனுக்கு பாராட்டு பாவிதழ் வழங்கப்பட்டு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பாரதிதாசனின் பேரன் கோ.செல்வம் பேசியதாவது: இன்றைய காலகட்டத்துக்கு தேவையான கருத்துகளை பாரதிதாசன் அன்றே பாடிச் சென்றுள்ளாா். பாரதிதாசன் பிறந்த நாளை பன்னாட்டு தமிழ் மொழி நாளாகவும், தமிழ் மொழி பாதுகாப்பு உறுதியேற்பு நாளாகவும் அறிவிக்க வேண்டும். மேலும், சென்னையில், பாரதிதாசனுக்கு நூலகத்துடன்
கூடிய மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, தமிழக அரசின் பாரதிதாசன் விருதுபெற்ற புலவா் செந்தலை ந. கவுதமன் ஏற்புரையாற்றினாா்.
இந்நிகழ்ச்சியில், புலவா் சி.பொன்முடி சுப்பையன், புலவா் கா.ச. அப்பாவு மற்றும் இருகூா் ஆறுமுகம், ஆ.வெ. மாணிக்கவாசகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.