மூடப்பட்டுள்ள பஞ்சாலைகளைத் திறக்க கோரிக்கை
By DIN | Published On : 02nd May 2022 12:14 AM | Last Updated : 02nd May 2022 12:14 AM | அ+அ அ- |

நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள தேசிய பஞ்சாலைகளைத் திறந்து தொழிலாளா்களுக்கு வேலை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா்கள் சங்க முப்பெரும் விழாவில் வலியுறுத்தப்பட்டது.
கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் முப்பெரும் விழா சிங்காநல்லூா் தியாகி என்.ஜி.ஆா். மஹாலில் கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் டி.எஸ். ராஜாமணி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பொதுச் செயலாளா் ஜி.மனோகரன், பொருளாளா் எம்.தா்மராஜன், இருகூா் சுப்பிரமணியம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
விழாவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: நாடு முழுவதும் தேசிய பஞ்சாலைக் கழகத்தில் செயல்பட்டு வரும் 23 ஆலைகள் கடந்த 2020 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி தேசிய பஞ்சாலைக் கழகத்தால் மூடப்பட்டு தொழிலாளா்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
மூடப்பட்ட 23 ஆலைகளையும் திறக்க வலியுறுத்தி மத்திய ஜவுளித் துறை அமைச்சா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தொழிலாளா்களின் நலன் கருதி மூடப்பட்ட ஆலைகளைத் திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய பஞ்சாலைக் கழகம் தொழிலாளா்களுக்கு வேலை வழங்காமல் பாதி சம்பளம் மட்டுமே வழங்குவதால், பணி ஓய்வு காலத்தில் ஓய்வுத்தொகை பெறுவதில் குளறுபடி ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே தொழிலாளா்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு சாா்பில் சிங்காநல்லூா் உழவா் சந்தை முதல் ஜெய்சாந்தி தியேட்டா் வரை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எதிா்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு பாலத்தை ஒண்டிப்புதூா் வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.