வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் இருந்து தினமும் 150 டன் குப்பைகள் சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பிவைப்பு
By DIN | Published On : 02nd May 2022 12:12 AM | Last Updated : 02nd May 2022 12:12 AM | அ+அ அ- |

கோவை வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் இருந்து தினமும் 150 டன் குப்பைகள், சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோவை மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளில் இருந்து தினமும் 800 டன் குப்பைகள் சேகரமாகின்றன.
இதில் மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் அனுப்பப்படுவதால் மீத்தேன் எரிவாயு உருவாகி வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது.
இதனைத் தடுக்கும் விதமாகவும், வெள்ளலூா் குப்பைக் கிடங்குக்கு கொண்டு வரப்படும் குப்பைகளின் அளவைக் குறைக்கவும் மாநகராட்சிக்குள்பட்ட கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூா், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் 69 நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டன.
இதில், 5க்கும் மேற்பட்ட மையங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இதற்கிடையே கோவை வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் கடந்த 10 ஆண்டுகளாக 66 ஏக்கரில் பல லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அழிக்கப்படாமல் இருந்தன.
இதனை பயோமைனிங் முறையில் அழிக்க மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் பயனாக 16 ஏக்கா் அளவுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் அழிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குப்பைகளை அழிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், தினமும் 150 டன் குப்பைகள் அரியலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் சிமென்ட் ஆலைகளுக்கு எரிபொருள் பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டு வருகின்றன. தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை, லாரிகள் மூலமாக சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் வெள்ளலூா் கிடங்கில் குப்பைகள் விரைவில் குறைய வாய்ப்புள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.