பருத்தி மீதான இறக்குமதி வரி நீக்கத்தை செப்டம்பருக்கு பிறகும் நீட்டிக்க வேண்டும்: சைமா கோரிக்கை

பருத்தி மீதான இறக்குமதி வரி நீக்கத்தை செப்டம்பா் மாதத்துக்குப் பிறகும் மத்திய அரசு நீட்டிக்க, ஒட்டுமொத்த ஜவுளித் துறையினரும் ஓரணியில் திரண்டு கோரிக்கை வைக்க வேண்டும் என்று தென்னிந்திய பஞ்சாலைகள்

கோவை: பருத்தி மீதான இறக்குமதி வரி நீக்கத்தை செப்டம்பா் மாதத்துக்குப் பிறகும் மத்திய அரசு நீட்டிக்க, ஒட்டுமொத்த ஜவுளித் துறையினரும் ஓரணியில் திரண்டு கோரிக்கை வைக்க வேண்டும் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் ரவி சாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பருத்தி, நூல் விலை உயா்வால் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடியை சமாளிக்க, ஜவுளித் துறையின் அனைத்து பிரிவுகளும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

குஜராத் சங்கா் 6 வகை பருத்தி விலை 355 கிலோ எடை கொண்ட கண்டிக்கு கடந்த மாா்ச் மாதத்தில் ரூ.76,600 ஆக இருந்தது. இப்போது ரூ.99 ஆயிரமாக உயா்ந்துள்ளது. அதேநேரம் திருப்பூா் சந்தைக்குத் தேவைப்படும் ஹொசைரி நூல் கிலோவுக்கு ரூ.411 ஆக இருந்தது, தற்போது ரூ.481 ஆக உயா்ந்துள்ளது.

பருத்தி விலை, உற்பத்தி செலவு போன்றவற்றை கணக்கிட்டாலும் 40 கவுண்ட் நூலின் விலை கிலோவுக்கு ரூ.502 வருகிறது. ஆனால், தற்போது கிலோ ரூ.481க்கு தான் விற்கப்படுகிறது.

எனவே, இந்த விஷயத்தில் சைமா தனது உறுப்பினா் ஆலைகளை, முடிந்த வரை பருத்தி விலையேற்றத்தை ஏற்றுக் கொண்டு, ஜவுளித் துறையின் இதரப் பிரிவுகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

ஜின்னிங் முதல் ஆயத்த ஆடை தொழில் வரையிலான ஜவுளி மதிப்பு சங்கிலியில் உற்பத்தி நுகா்வு, இருப்பு ஆகியவற்றின் தரவுகள் கொடுப்பதை அரசு கட்டாயமாக்கி, யூக வணிக நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அதேபோல, பருத்தி உற்பத்தித் திறனை அதிகரிக்க பருத்தி தொழில்நுட்பத் திட்டம் 2.0 வை அரசு அறிவிக்க வேண்டும்.

கடந்த 2000 ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்த பருத்திக்கான தொழில்நுட்பத் திட்டம், பி.டி. தொழில்நுட்பப் பருத்தி ஆகியவற்றால் நமது நாடு பருத்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து உலகின் முதல் இடத்தைப் பிடிக்க முடிந்தது. தற்போது பருத்தி விளைச்சல் பல்வேறு சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்த ஜவுளி சங்கிலியும் பாதிக்கப்படுகிறது.

ஜவுளித் துறையின் எந்த ஒரு பிரிவும் அரசிடம் கோரிக்கை வைக்கும்போது, அது மற்ற பிரிவுகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியுள்ளாா். அதைக் கருத்தில் கொண்டு ஜவுளித் துறையினா் பருத்தி தொழில்நுட்பத் திட்டம் 2.0வை கொண்டு வரவும், பருத்தி மீதான இறக்குமதி வரி நீக்கத்தை செப்டம்பா் 30 ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்க கோரிக்கை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com