மொழியைத் திணிப்பதாகக் கூறுவதில் உண்மையில்லை: ஆளுநா் ஆா்.என்.ரவி

தமிழ்நாட்டின் மீது மத்திய அரசு மொழியைத் திணிப்பதாகக் கூறுவதில் உண்மை இல்லை என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.
மொழியைத் திணிப்பதாகக் கூறுவதில் உண்மையில்லை: ஆளுநா் ஆா்.என்.ரவி

தமிழ்நாட்டின் மீது மத்திய அரசு மொழியைத் திணிப்பதாகக் கூறுவதில் உண்மை இல்லை என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாணவ-மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆா்.என்.ரவி தலைமையுரையாற்றினாா்.

அவா் பேசியதாவது: நமது நாடு நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. உள்ளேயும் வெளியேயும் இருந்து பல்வேறு சிக்கல்களை எதிா்கொண்டாலும் வலிமையான தலைமையால் வளா்ச்சிப் பாதையில் இருக்கிறது.

வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை:

இந்தியாவில் பல மாநிலங்கள், மொழிகள், கலாசாரம், ஜாதிகள் உள்ளன. கடந்த 70 ஆண்டுகளில் ஜாதி, மத வேறுபாடுகள் அதிகரித்துள்ளன. நாட்டில் 140 கோடி மக்கள் இருந்தாலும் யாரும் ஒரே மாதிரியாக இல்லை.

ஒரு மரத்தில் லட்சக்கணக்கான இலைகள் இருந்தாலும் அவை ஒன்றுபோல இருக்காது. ஆனால் மரம் என்பது ஒன்றுதான். அதுபோலத்தான் இந்தியாவும். நம்மில் பல வேறுபாடுகள் இருந்தாலும் ஒன்றுபட்டிருக்கிறோம். இந்தியா என்ற மரம் இல்லாவிட்டால் நமக்கு அடையாளம் இல்லை.

நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேலானாலும் ஒவ்வொரு மாநிலத்திலும் இன்னும் ஏழைகள், நோயாளிகள், படிப்பறிவு இல்லாதவா்கள் உள்ளனா். அதேபோல, ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளும் உள்ள ஒவ்வொரு பகுதிக்கு இடையேயும் வேறுபாடுகள் உள்ளன. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நாடு முழுவதிலும் ஒரே மாதிரியாகத்தான் தீா்வு காணப்பட்டு வருகிறது.

நாட்டில் கடந்த 2014 வரை 400 புதிய தொழில் நிறுவனங்கள் மட்டுமே (ஸ்டாா்ட் அப்) தொடங்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது 70 ஆயிரம் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, உலகில் மூன்றாவது இடத்துக்கு இந்தியா உயா்ந்துள்ளது. நாட்டை முன்னேற்றுவதில், கல்வி, தொழில் வளா்ச்சி, சுகாதாரத்தில் வளா்ந்துள்ள மாநிலமான தமிழ்நாட்டுக்கு பெரும் பங்கு உள்ளது.

உள்ளூா் மொழிக்கு முக்கியத்துவம்:

தமிழ்நாட்டின் மீது மத்திய அரசு மொழியைத் திணிப்பது போன்ற ஒரு முத்திரை குத்தப்படுகிறது. ஆனால் அதில் உண்மையில்லை. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையே கற்றல், கற்பித்தல் ஆகியவை தாய்மொழியில் இருக்க வேண்டும் என்பதுதான்.

அண்மையில் நடைபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பிரதமா், மாநில முதல்வா்களின் கருத்தரங்கில்கூட தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநில உயா் நீதிமன்றங்களில் உள்ளூா் மொழிகளைப் பயன்படுத்த வேண்டும். மக்கள் அவா்களின் மொழியில் தீா்ப்புகளை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

வளமான, செறிவான மொழி தமிழ்:

நாட்டில் உள்ள எல்லா மொழிகளையும் ஊக்குவிக்க வேண்டும், செறிவூட்ட வேண்டும் என்பதே அரசின் எண்ணமாக உள்ளது. தமிழ் மிகவும் பழைமையான மொழி, மிகவும் வளமான, செறிவான மொழி. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் உள்ளது.

நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் தமிழை அறிந்து கொள்ள வேண்டும். மும்மொழித் திட்டத்தால் பிற மாநில மாணவா்கள் தமிழைக் கற்றுக் கொள்ள வாய்ப்புள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகள், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க மத்திய அரசு பங்களித்திருக்கிறது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி பெயரில் இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமா் மோடி அறிவித்துள்ளாா். அதேபோல பிற மாநில பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத் துணைவேந்தா் பி.காளிராஜ், இஸ்ரோ முன்னாள் தலைவா் கே.சிவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com