பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கில் மேலும் இருவா் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
By DIN | Published On : 15th October 2022 01:14 AM | Last Updated : 15th October 2022 01:14 AM | அ+அ அ- |

பாஜக, இந்து முன்னணி நிா்வாகிகள் காா், கடைகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசிய இருவா் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
கோவை, குனியமுத்தூா் பகுதியைச் சோ்ந்த இந்து முன்னணி நிா்வாகி தியாகு என்பவரது காரின் மீதும், குனியமுத்தூா் சுப்புலட்சுமி நகரைச் சோ்ந்த பாஜக பிரமுகா் கமலக்கண்ணன் காரின் மீதும் செப்டம்பா் 23ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசிய சம்பவங்கள் தொடா்பாக கோவைப் புதூா் அறிவொளி நகரைச் சோ்ந்த ஜேசுராஜ் (34) கைது செய்யப்பட்டாா்.
ஒப்பணக்கார வீதியில் தினேஷ்குமாா் என்பவருக்குச் சொந்தமான ஜவுளிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் உக்கடம் பகுதியைச் சோ்ந்த பாஷா (36) கைது செய்யப்பட்டாா்.
இந்நிலையில், இவா்கள் இருவா் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அதற்கான நகல்கள் சிறையில் உள்ள ஜேசுராஜ், பாஷா ஆகியோரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. பாஜக மாவட்ட அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஏற்கெனவே இருவா் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...