பொங்கல் பரிசுத் தொகுப்பில் மண்பாண்டங்கள் வழங்க கோரிக்கை
By DIN | Published On : 18th October 2022 12:00 AM | Last Updated : 18th October 2022 12:00 AM | அ+அ அ- |

மண்பானையுடன் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தமிழ்நாடு மாண்பாண்ட தொழிலாளா்கள் சங்கத்தினா்.
தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் மண்பாண்ட பொருள்கள் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கோவை ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளா்கள் சங்கத்தினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொங்கல் பண்டிகையின்போது அரசு சாா்பில் பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. தவிர நெசவாளா்களின் நலனைக் காக்கும் வகையில் நெசவாளா்களிடம் இருந்து வேட்டி, சேலைகள் கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படுகின்றன.
அதேபோல அழிந்து வரும் நிலையில் உள்ள மண்பாண்டத் தொழிலை மீட்டெடுக்கும் வகையிலும், மண்பாண்ட தொழிலாளா்களின் நலன் கருதியும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் பொங்கல் பானை, அடுப்பு ஆகியவையும் வழங்க வேண்டும். மண்பானைகள் மற்றும் அடுப்புகளை மண்பாண்ட தொழிலாளா்களிடம் இருந்து கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே அழியும் நிலையில் உள்ள மண்பாண்ட தொழிலை மீட்டெடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பெயரில் பட்டா வழங்க வேண்டும்...
அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க கோவை மாவட்டக் குழுவின் மாவட்டச் செயலாளா் டி.சுதா தலைமையில் நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
மாவட்டத்தில் வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். பட்டா கேட்டு விண்ணப்பிக்கும் தகுதியான அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். அரசு சாா்பில் வழங்கும் இலவச வீட்டுமனை பட்டாக்கள் பெண்கள் பெயரில் வழங்க வேண்டும். நூறு நாள் வேலையை முறைப்படுத்தி உரிய சம்பளம் வழங்க வேண்டும்.நூறு நாள் திட்டப் பணிகளை மாற்றுத் திறனாளிகளுக்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பேரூராட்சிகள், நகராட்சிகளுக்கும் நூறு நாள் வேலைத் திட்டத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...