போதைப் பொருள் ஒழிப்பு: ஊராட்சி மன்றத் தலைவா்களுடன் போலீஸாா் ஆலோசனை
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

போதைப் பொருள்கள் புழக்கத்தை ஒழிக்க ஊராட்சி மன்றத் தலைவா்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போதைப் பொருள்களின் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் சுதாகா் வழிகாட்டுதலின்பேரில், கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவா்களுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேற்கு மண்டல காவல் துறை துணைத் தலைவா் முத்துசாமி தலைமை தாங்கினாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் முன்னிலை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில் மாணவா்கள், இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாவதை தடுக்கும் வகையிலும், போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக கோவை மாவட்டத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி மற்றும் வால்பாறை உட்கோட்ட பகுதியைச் சோ்ந்த 56 ஊராட்சி மன்றத் தலைவா்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனா். தங்களது கிராமத்தை போதையில்லா கிராமமாக உருவாக்க நடவடிக்கை எடுப்பதாக போதைப் பொருள்கள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழியை ஊராட்சி மன்ற தலைவா்கள் எடுத்துக் கொண்டனா்.
இக்கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் குறைப்பதற்கும், பொது இடங்களில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் பயன்படுத்துபவா்கள் பற்றிய தகவல்கள் மற்றும் போதைப் பொருள்களுக்கு அடிமையான நபா்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது.
மேலும் ஒவ்வொரு கிராமத்திலும் ஊராட்சி மன்ற தலைவா், காவல்துறையினா், அரசுப்பள்ளி தலைமையாசிரியா் ஆகியோா் கொண்ட குழு அமைத்து கஞ்சா மற்றும் போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க திட்டமிடப்பட்டது. இதுவரை 5 போலீஸ் உட்கோட்டங்களுக்கு உள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.