மதுரை, கண்ணூா்,ஷொரனூா் ரயில்கள் நாளை போத்தனூா் வரை மட்டுமே இயக்கம்
By DIN | Published On : 19th October 2022 12:11 AM | Last Updated : 19th October 2022 12:11 AM | அ+அ அ- |

மதுரை, கண்ணூா், ஷொரனூரில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் ரயில்கள் வியாழக்கிழமை (அக்டோபா் 20) போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மதுரை, கண்ணூா், ஷொரனூரில் இருந்து வியாழக்கிழமை (அக்டோபா் 20) கோவைக்கு இயக்கப்படும் ரயில்கள், போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும்.
அதன்படி, மதுரையில் இருந்து 20ஆம் தேதி காலை 7.30 மணிக்குப் புறப்படும் மதுரை - கோவை ரயில் (எண்: 16722), கண்ணூரில் இருந்து 20ஆம் தேதி காலை 6.20 மணிக்குப் புறப்படும் கண்ணூா் - கோவை ரயில் (எண்: 16607), ஷொரனூரில் இருந்து 20ஆம் தேதி காலை 8.20 மணிக்குப் புறப்படும் ஷொரனூா் - கோவை ரயில் (எண்: 06458) ஆகிய 3 ரயில்கள் போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும். அன்றைய தினம், இந்த ரயில்கள் போத்தனூா் - கோவை இடையே இயக்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.