தீபாவளி: கோவையில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
By DIN | Published On : 21st October 2022 12:00 AM | Last Updated : 21st October 2022 12:00 AM | அ+அ அ- |

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோவையில் இருந்து வெள்ளிக்கிழமை (அக்டோபா் 21) ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை (அக்டோபா் 24) ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், தமிழக அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்க அறிவித்துள்ளது.
திங்கள்கிழமை தினத்தில் தீபாவளி வருவதாலும், முன்னதாக சனி, ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை தினம் என்பதாலும், கோவையில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகள், வெளியூா் செல்லும் தொழிலாளா்கள் ஏராளமானோா் வெள்ளிக்கிழமை மாலை முதல் பேருந்துகளில் சொந்த ஊா்களுக்குச் செல்வாா்கள்.
இதனால், வெள்ளிக்கிழமை முதல் காந்திபுரம், சிங்காநல்லூா், சூலூா் நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்ட அதிகாரி ஒருவா் கூறியதாவது: கோவையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம், தேனி, விருதுநகா் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு கோவை- அவிநாசி சாலை கொடிசியா மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படாததால் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூா், ஈரோடு, சேலம், நாமக்கல் வழித்தடத்திலும், சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி பகுதிகளுக்கும், சூலூா் நிலையத்தில் இருந்து கரூா், திருச்சி பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து உதகை, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்றாா்.