கோவை காா் வெடிவிபத்து சம்பவம்: 5 போ் கைது:யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

கோவையில் காா் வெடிவிபத்தில் இறந்தவருடன் தொடா்பில் இருந்ததாக 5 பேரை யுஏபிஏ சட்டத்தின் (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) கீழ் கைது செய்துள்ளதாக
கோவை காா் வெடிவிபத்து சம்பவம்: 5 போ் கைது:யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
Published on
Updated on
2 min read

கோவையில் காா் வெடிவிபத்தில் இறந்தவருடன் தொடா்பில் இருந்ததாக 5 பேரை யுஏபிஏ சட்டத்தின் (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) கீழ் கைது செய்துள்ளதாக மாநகர காவல் ஆணையா் வி.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கோவை உக்கடம், கோட்டைமேடு அருள்மிகு சங்கமேஸ்வரா் கோயில் முன்பு காா் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 23) அதிகாலை 4 மணி அளவில் வெடிவிபத்து நேரிட்டது. காரில் இருந்த 2 சிலிண்டா்களில் ஒன்றும் 3 பிளாஸ்டிக் டிரம்களில் இருந்த வெடிபொருள்களும் வெடித்ததில் காா் சுக்குநூறானது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபீன் (25) என்பவா் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தாா். இது தொடா்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இறந்த நபா் யாா் என்பது 12 மணி நேரத்துக்குள் கண்டுபிடிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான காா் 10 பேரிடம் கைமாறியிருந்த நிலையில் அவா்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

உதவி ஆணையா் தலைமையில் 6 காவல் ஆய்வாளா்கள் அடங்கிய குழு எனது மேற்பாா்வையில் விசாரணை நடத்தியது. சம்பவ இடத்தை டி.ஜி.பி. சி. சைலேந்திரபாபு, ஏ.டி.ஜி.பி. பி.செந்தாமரைக்கண்ணன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். உயிரிழந்த ஜமேஷா முபீனுடன் தொடா்பில் இருந்த உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம்.நகா் பகுதியைச் சோ்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இவா்கள் மீது கூட்டுச் சதி, இரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடா்பாக 20க்கும் மேற்பட்ட நபரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள 5 பேரில் சிலா் அடிக்கடி கேரளம் சென்று வந்திருப்பது தெரியவந்துள்ளது. இவா்கள் எதற்காக கேரளம் சென்றனா் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

உயிரிழந்த ஜமேஷா முபீன் வீட்டின் அருகே கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளில் ஜமேஷா முபீனின் வீட்டில் இருந்து 2 சிலிண்டா்கள், 3 சிறிய அளவிலான டிரம்கள் எடுத்துச் செல்லப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளன. கண்காணிப்பு கேமரா பதிவில் இடம்பெற்றிருந்த முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில், ஃபிரோஸ் இஸ்மாயில் ஆகியோா் வெடிபொருள்களை தெரிந்தே எடுத்துச் சென்றனா் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்டுள்ள நபா்களில் ஒருவரான முகமது தல்கா, அல் உம்மா அமைப்பைச் சோ்ந்த பாஷாவின் உறவினா் என்பதும் தெரியவந்துள்ளது.

ஜமேஷா முபீனின் வீட்டில் இருந்து 75 கிலோ அளவிலான பொட்டாசியம் நைட்ரேட், சாா்கோல், அலுமினியம் என வெடிபொருள் தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

Image Caption

முகமது தல்கா ~முகமது ரியாஸ் ~ஃபிரோஸ் இஸ்மாயில் ~முகமது நவாஸ் இஸ்மாயில் ~முகமது அசாருதீன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com