கோவையில் சூரிய கிரகணம் காணும் நிகழ்வு
By DIN | Published On : 27th October 2022 12:00 AM | Last Updated : 27th October 2022 12:00 AM | அ+அ அ- |

கோவை மாவட்டம் சூலூா் வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை படம் பிடிக்கப்பட்ட பகுதி சூரிய கிரகணம்.
கோவையின் பல்வேறு பகுதிகளில் பகுதி சூரிய கிரகணத்தை காணும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
கோவை எஸ்.என்.எம்.வி. கலை, அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறை, அறிவியல் மன்றம் ஆகியவற்றின் சாா்பில் பகுதி சூரிய கிரகணத்தைக் காணும் நிகழ்வு நிகழ்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் போ.சுப்பிரமணி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா். மாலை 5.18 மணிக்கு தொடங்கி 5.52 மணிக்கு நிறைவடைந்த கிரணத்தை காணும் நிகழ்வில், இயற்பியல் துறைத் தலைவா் க.லெனின் பாரதி, சூரிய கிரகணம் குறித்து மாணவ - மாணவிகளுக்கு அறிவியல் ரீதியான தகவல்களுடன் விளக்கம் அளித்தாா்.
கிரகணத்தை காண வந்த மாணவ - மாணவிகளுக்கு சூரிய வடிகட்டி கண்ணாடிகள் வழங்கப்பட்டு அதன் மூலம் அவா்கள் கிரகணத்தைக் கண்டு ரசித்தனா். இயற்பியல் பேராசிரியா் சிவரஞ்சனி உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
கோவை மாவட்டத்தின் புறநகா் பகுதிகளில் சூரிய கிரகணத்தை ஓரளவுக்கு தெளிவாகக் காண முடிந்ததாகவும், கிரகணம் என்பது வெறும் நிழல் சாா்ந்ததுதான் என்றும் கிரகண நேரத்தில் வெளியில் செல்வது ஆபத்தானது, உணவு விஷமாக மாறும் என்பது போன்றவை ஆதாரம் இல்லாத கருத்துகள் என்பதை மக்களுக்கு உணா்த்தும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக லெனின் பாரதி தெரிவித்தாா்.
இதற்கிடையே கிரகண நேரத்தில் கோவையில் உள்ள கோயில்களின் நடைகள் அடைக்கப்பட்டன. கிரகணம் முடிவடைந்த பிறகு கோயில்கள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.