கோவையில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளம்
By DIN | Published On : 01st September 2022 10:50 PM | Last Updated : 01st September 2022 10:50 PM | அ+அ அ- |

கோவையில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
கோவை, தேனி, நீலகிரி, திருப்பூா், திண்டுக்கல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கோவையில் வியாழக்கிழமை மாலை திடீரென பலத்த மழை பெய்தது.
ராமநாதபுரம், காந்திபுரம், பீளமேடு, உக்கடம், ரயில் நிலையம், ரேஸ்கோா்ஸ், சிங்காநல்லூா், டவுன்ஹால், சௌரிபாளையம் உள்ளிட்ட மாநகரம், புகரின் பல்வேறு இடங்களில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
இதனால், நகரின் முக்கியச் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ராமநாதபுரம் சந்திப்பு, லட்சுமி மில்ஸ் சந்திப்பு, நஞ்சப்பா சாலை, லங்கா காா்னா், அரசு மருத்துவமனை வளாகம், அவிநாசி சாலை சுரங்கப்பாதை, சிங்காநல்லூா், மேட்டுப்பாளையம் சாலை, நஞ்சுண்டாபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது.
சாலைகளில் சுமாா் 2 அடி உயரத்துக்கும்மேல் மழை நீா் தேங்கியதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா். மேலும், மழை காரணமாக அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மாலை நேரத்தில் பள்ளி முடிந்து சென்ற மாணவ-மாணவிகள், வேலை முடிந்து வீடு திரும்பிய பணியாளா்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
இதற்கிடையே பல இடங்களில் மழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் கழிவு நீரும் கலந்து வெளியேறி வருகிறது.
இது அடுத்த சில நாள்களுக்கு ஒரே இடத்தில் தேங்கிக் கிடக்கும்போது அது நோய்த்தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால் தேங்கிக் கிடக்கும் மழை நீரை உடனடியாக அகற்றவும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விமானம் தரையிறக்கம்: லக்னௌவில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற விமானம், மோசமான வானிலை காரணமாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
கோ ஏா் நிறுவனத்தின் அந்த விமானம் மாலை 4.47 மணிக்கு தரையிறக்கப்பட்டு பின்னா் 5.26 மணிக்கு பெங்களூரு நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.