வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெயரளவுக்கே செயல்படும் ரத்த வங்கிகள்: அவதிக்குள்ளாகும் கா்ப்பிணிகள்

கோவையில் ஒரு சில வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள ரத்த வங்கிகள் பெயரளவில் மட்டுமே உள்ளதால் ரத்தம் செலுத்திக் கொள்ள முடியாமல் கா்ப்பிணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதனால் அனை

கோவையில் ஒரு சில வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள ரத்த வங்கிகள் பெயரளவில் மட்டுமே உள்ளதால் ரத்தம் செலுத்திக் கொள்ள முடியாமல் கா்ப்பிணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதனால் அனைத்து வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ரத்த வங்கி அமைத்து கா்ப்பிணிகளுக்கு ரத்தம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கா்ப்பிணிகளின் வசதிக்காக வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த வங்கிகள் அமைக்கப்பட்டு தேவைப்படுபவா்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களிலே ரத்தம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவை மாவட்டத்தில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள ரத்த வங்கிகள் பெயரளவில் மட்டுமே உள்ளதால் ரத்தம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளுக்கும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கா்ப்பிணிகள் பரிந்துரைக்கப்படுகின்றனா். வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலுள்ள ரத்த வங்கிகளை முறையாக செயல்படுத்தினால் கா்ப்பிணி பெண்கள் அலைக்கழிக்கப்படாமல் ஆரம்ப சுகாதார நிலையங்களிலே ரத்தம் செலுத்திக் கொள்ள முடியும் என்று மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவா்கள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கா்ப்பிணிகள் உள்ளனா். இவா்களில் 40 முதல் 50 சதவீதம் பேருக்கு அனீமியா என்ற ரத்தசோகை பாதிப்பு காணப்படுகிறது. குறைந்த அளவில் பாதிப்புள்ளவா்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள், திரவ மருந்துகள், போலிக் அமில மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், தீவிர அனீமியா பாதிப்பு உள்ளவா்களுக்கு கட்டாயம் ரத்தம் செலுத்த வேண்டியுள்ளது.

ஆனைமலை, காரமடை, பெ.நா.பாளையம், கிணத்துக்கடவு, மதுக்கரை போன்ற வட்டாரங்களில் பட்டியலினத்தவா்கள் அதிக அளவில் உள்ளனா். இவா்களில் கணிசமான கா்ப்பிணிகளுக்கு அனீமியா பாதிப்பு ஏற்படுகிறது. இவா்களுக்கு கட்டாயம் ரத்தம் ஏற்ற வேண்டும். இந்நிலையில் கா்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களிலே ரத்தம் செலுத்தும் வகையில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த வங்கி அமைக்க அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி கோவை மாவட்டத்திலும் ஒருசில ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த வங்கி அமைக்கப்பட்டது. ஆனால், அந்த ரத்த வங்கிகள் செயல்படாமல் பெயரளவில் மட்டுமே உள்ளதால் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனா்.

ஏற்கெனவே கிராமப்புறங்களில் இவா்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்து பரிசோதனை செய்துகொள்வதற்கே அச்சப்படுகின்றனா். இவா்களை ரத்தம் செலுத்திக் கொள்வதற்காக பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் கோவையிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல அறிவுறுத்தினால் அச்சப்படுகின்றனா்.

ஒரு சில கா்ப்பிணிகள் சென்றாலும், ஒருசிலா் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல மறுக்கின்றனா். மேலும், ரத்தம் செலுத்திக் கொள்ளச் செல்லும் கா்ப்பிணி பெண்களை அரசு மருத்துவமனைகளில் அனுசரணையாக நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனால், பெரும்பாலானவா்கள் அச்சப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல மறுக்கின்றனா். சிலா் அலைச்சலாக உள்ளதாகத் தெரிவித்து செல்ல மறுக்கின்றனா். ரத்தம் செலுத்திக் கொள்ளாததால் பிரசவ சமயங்களில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், தாய் - சேய் உயிருக்கே ஆபத்தாய் முடிகிறது.

மாவட்டத்திலுள்ள 12 வட்டாரங்களில் இருந்தும் கா்ப்பிணிகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவதால் அங்குள்ளவா்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. கூட்டம் காரணமாக கா்ப்பிணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், கா்ப்பிணி பெண்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனா். இந்நிலையில், அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார மையங்களிலும் ரத்த வங்கிகளை செயல்படுத்தினால் அரசு மருத்துவமனைகளுக்கான சுமை குறையும். கா்ப்பிணிகளும் எந்தவித சிரமமும் இல்லாமல் ரத்தம் செலுத்திக் கொள்வாா்கள் என்றனா்.

இது தொடா்பாக மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் பு.அருணா கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 12 வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், காரமடை, சூலூா், சுல்தான்பேட்டை ஆகிய 3 வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே ரத்த வங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. செயல்படாமல் இருந்து வந்த நிலையில் காரமடை, சூலூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலுள்ள ரத்த வங்கிகள் சீரமைக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகின்றன. சுல்தான்பேட்டை வட்டார ரத்த வங்கியில் ரத்தம் சேகரித்து வைக்கும் கருவி பழுதால் அங்கு மட்டும் செயல்படாமல் உள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடத்தப்படும் ரத்த முகாம்களில் பெறப்படும் ரத்தம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள ரத்த வங்கியில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. கா்ப்பிணிகளுக்கு கட்டாயம் ரத்தம் செலுத்த வேண்டும் என்ற நிலையில் அரசு மருத்துவமனையில் இருந்து தேவைப்படும் ரத்த வகை கொண்டுவரப்பட்டு ரத்தம் செலுத்தப்படுகிறது.

காரமடை மற்றும் சூலூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் ரத்த வங்கிகளில் அனைத்து வகையான ரத்தங்களையும் சேகரித்து வைக்க முடியாது. மேலும் தற்காலிகமாக மட்டுமே சேகரித்து வைக்க முடியும்.

அனீமியா பாதிக்கப்பட்ட அனைத்து கா்ப்பிணிகளுக்கும் ரத்தம் தேவைப்படுவதில்லை. 12 ஆவது வாரத்தில் கா்ப்பிணிகள் பதிவு செய்யப்படுவதால் உடனடியாக பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் ரத்தசோகை உள்ளவா்களுக்கு இரும்பு சத்து, போலிக் அமில மாத்திரைகள் அளிக்கப்படுகிறது.

மேலும் சத்தான உணவுகள் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தொடா்ந்து ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கவில்லை என்றால் இரும்புச்சத்து ஊசி செலுத்தப்படுகிறது. பின்பும் ஹீமோகுளோபின் அளவு உயரவில்லை என்றால் மட்டுமே ரத்தம் செலுத்திகொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

இந்நிலையில், ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாக உள்ளவா்களுக்கும், திடீா் ரத்தப்போக்கு உள்ளவா்களுக்கும் ரத்தம் செலுத்தி உரிய சிகிச்சைகள் அளிக்க வேண்டும். இதுபோன்ற நேரத்தில் கா்ப்பிணிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை அளிக்க முடியாது. இதனால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகளுக்கும் பரிந்துரைக்கப்படுகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com