கோவையில் பந்து கொப்பரை இருப்புவைக்க கிடங்கு வசதியில்லை:விவசாயிகளிடம் கொப்பரை கொள்முதல் செய்யாமல் அலைக்கழிப்பு

கோவையில் பந்து கொப்பரை இருப்புவைக்க கிடங்கு வசதியில்லை என்று தெரிவித்து கொள்முதல் நிலையங்களுக்கு வரும் விவசாயிகளை திருப்பி அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவையில் பந்து கொப்பரை இருப்புவைக்க கிடங்கு வசதியில்லை என்று தெரிவித்து கொள்முதல் நிலையங்களுக்கு வரும் விவசாயிகளை திருப்பி அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் முக்கிய சாகுபடி பயிராக தென்னை இருந்து வருகிறது. குறிப்பாக கோவை, திருப்பூா், திண்டுக்கல், தஞ்சாவூா், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிக பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நீண்டகால பயிா் என்பதாலும், தென்னையில் இருந்து பல்வேறு மதிப்புக்கூட்டுப் பொருள்கள் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளதாலும் விவசாயிகளின் முதல் தோ்வாக தென்னை பயிா் உள்ளது.

தென்னையில் இருந்து பல்வேறு மதிப்புக்கூட்டு பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தாலும் முக்கிய மதிப்புக்கூட்டுப் பொருளாக இருப்பது கொப்பரை. ஆனால், இந்த கொப்பரைக்கு பெரிய அளவில் விலை இல்லாமல் இருந்து வந்ததால் குறைந்தபட்ச விலை நிா்ணயிக்கப்பட்டு அரசு சாா்பில் கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில், மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின்கீழ், வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொப்பரை கொள்முதல் செய்யும் திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

அதன்படி, ஆண்டுதோறும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகளிடம் இருந்து கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு பருவத்தில் கொப்பரையின் கொள்முதல் விலையும் உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ அரவை கொப்பரை ரூ.108.90க்கும், பந்து கொப்பரை ரூ.117.50க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

22 ஆயிரம் டன் இலக்கு: கோவை மாவட்டத்தில் அன்னூா், ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம், செஞ்சேரி, சூலூா், தொண்டாமுத்தூா், காரமடை உள்ளிட்ட 10 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. மாவட்டத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செப்டம்பா் 30 ஆம் தேதி வரையிலான ஆறு மாத காலகட்டத்துக்கு 22 ஆயிரம் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பொள்ளாச்சி, செஞ்சேரி மையங்களில் பந்து கொப்பரை கொள்முதல் செய்வதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் புறக்கணிப்பு: கோவையில் அனைத்து வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து 6 ஆயிரம் டன்னுக்குமேல் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பந்து கொப்பரை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

மேலும், குறைந்த அளவு கொப்பரை கொண்டுவரும் விவசாயிகளிடம் இருந்து கொப்பரை கொள்முதல் செய்வதில்லை என்றும், வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டு, வியாபாரிகளுக்கே முக்கியத்துவம் அளிப்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனா்.

இது தொடா்பாக பொள்ளாச்சியைச் சோ்ந்த விவசாயி சு.சந்தானம் கூறியதாவது: கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் தென்னை சாகுபடி செய்து வருகிறேன். மதிப்புக்கூட்டு பொருளாக பந்து கொப்பரையும் உற்பத்தி செய்து வருகிறேன். என்னிடம் இருந்த 400 கிலோ பந்து கொப்பரைகளை குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின்கீழ் விற்பனை செய்வதற்காக பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு சென்றேன்.

ஆனால், கோைவை மாவட்டத்தில் பந்து கொப்பரைகளை இருப்பு வைப்பதற்கு கிடங்கு வசதியில்லை என்றும், இதனால், குறைந்த அளவிலான கொப்பரைகளை கொள்முதல் செய்ய முடியாது என்றும், 4 டன்னுக்கும் அதிகமான கொப்பரைகள் இருந்தால் கொள்முதல் செய்து கொள்வதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். சிறு விவசாயியான நான் 4 டன் கொப்பரைக்கு எங்கு செல்வது? நான் உற்பத்தி செய்வதை மட்டுமே கொண்டு செல்ல முடியும்.

கொப்பரை கொள்முதல் திட்டத்தில் குறிப்பிட்ட வியாபாரிகள் விவசாயிகளின் சிட்டா, அடங்கலை பயன்படுத்தி கொப்பரை விற்பனை செய்து வருகின்றனா். அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருந்து வருகின்றனா். அதேவேளையில் சிறு விவசாயிகள் கொண்டு செல்லும் குறைந்த அளவிலான உற்பத்தி பொருள்களை கொள்முதல் செய்யாமல் அலைக்கழிக்கின்றனா். இடைத்தரகா்கள் இன்றி வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்வதற்காக தொடங்கப்பட்ட வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வியாபாரிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஏற்கெனவே பல்வேறு காரணங்களால் விவசாயிகள் கொப்பரை உள்பட எந்தவித மதிப்புக்கூட்டு பொருள்கள் உற்பத்தியிலும் ஈடுபடுவதில்லை. ஒரு சில விவசாயிகள் மட்டுமே பல்வேறு சிரமங்களுக்கிடையே கொப்பரை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனா். என்னைப் போன்ற சிறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் கொப்பரைகளையும் கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் திருப்பி அனுப்புவதால், எங்கள் உற்பத்தி பொருளை வேறு வழியின்றி கிடைத்த விலைக்கு வியாபாரிகளிடம் விற்பனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றாா்.

இது தொடா்பாக கோவை விற்பனைக் குழு முதுநிலை மேலாளா் சு.ஆறுமுகசாமி கூறியதாவது: கோவையில் பொள்ளாச்சி மற்றும் செஞ்சேரியில் தலா 200 டன் வீதம் பந்து கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பந்து கொப்பரை கொள்முதல் செய்வது தொடா்பாக பொள்ளாச்சியைச் சோ்ந்த ஒரு விவசாயிடம் இருந்து புகாா் பெறப்பட்டது. தற்போது அவரிடம் இருந்து கொப்பரை கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பந்து கொப்பரை குறைந்த அளவு வருவதால் அதனை கையாள்வதில் சிரமம் இருக்கிறது. குறைந்த அளவு இருப்பதால் அரவை கொப்பரையுடன் சோ்த்து வைக்க வேண்டியிருக்கும். இதனால், பந்து கொப்பரை உடைவதற்கு வாய்ப்புள்ளது. அதிக அளவு பந்து கொப்பரை வரத்து வரும்போது அவை சேலத்தில் உள்ள கிடங்குக்கு அனுப்பப்பட்டு, இருப்பு வைக்கப்படும்.

இந்நிலையில், அனைத்து வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகளுக்கும் விவசாயிகள் கொண்டு வரும் குறைந்த அளவு கொப்பரையையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com