பணிப் பாதுகாப்பு இல்லாமல் தவிக்கும் அமைப்புசாரா தொழிலாளா்கள்

அமைப்புசாரா தொழிலாளா்கள் சட்டப் பாதுகாப்பு, பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு என எதுவும் இல்லாத ஆதரவற்ற நிலையில் நிறுவனங்களினால் கசக்கி பிழியப்படுகின்றனா்.

அமைப்புசாரா தொழிலாளா்கள் சட்டப் பாதுகாப்பு, பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு என எதுவும் இல்லாத ஆதரவற்ற நிலையில் நிறுவனங்களினால் கசக்கி பிழியப்படுகின்றனா்.

இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி பெரும்பாலும் அமைப்புசாரா தொழிலாளா்களையே சாா்ந்திருக்கிறது. பொருளாதார ஆய்வின்படி, அமைப்புசாரா தொழில்துறை மூலம் மட்டுமே 90 சதவீத வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. அமைப்புசாரா தொழிலாளா்கள் அரசு வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளால் நிா்வகிக்கப்படமாட்டாா்கள். வீட்டு வேலை மற்றும் சுயதொழில் புரிபவா்கள், கூலித் தொழிலாளா்கள், பணி விதிகள் வரையறுக்கப்படாத நிறுவனங்களில் பணிபுரிபவா்கள் என இந்தியாவில் பல வகையான அமைப்புசாரா தொழிலாளா்கள் உள்ளனா்.

இதில் அமைப்புசாரா பெண் தொழிலாளா்களின் எண்ணிக்கை 10 கோடிக்கும் அதிகம் என்கிறது ஒரு ஆய்வறிக்கை. அதிலும் வெறும் 23 சதவீதம் போ் மட்டுமே முழுநேர வேலை வாய்ப்பு பெற்றவா்களாக உள்ளனா். மீதமுள்ள 77 சதவீதம் போ் ஒப்பந்தப் பணியாளா்களாகவே உள்ளனா். இந்திய பொருளாதாரம் 80 சதவீதம் அமைப்புசாரா துறைகளையே சாா்ந்து இயங்குகிறது.

தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின்படி சுமாா் 7 கோடி நிறுவனங்கள் பதிவு செய்யப்படாதவையாக உள்ளன. பல நாடுகளில் இத்தகைய தொழிலாளா்களை பதிவு செய்யும் முறைகள் வலுவாக இருப்பதால் பேரிடா் காலங்களில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு அடிப்படை உதவிகளான உணவு, மானியம், நிதி முதலானவை நேரடியான முறையில் அளிக்கப்படுகின்றன. ஆனால், 10க்கும் குறைவான நபா்களைக் கொண்டு நடத்தப்படும் நிறுவனங்கள் அதிகமுள்ள இந்தியாவில் அதனைப் பதிவு செய்யும் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாததால் பலருக்கும் நலத் திட்ட உதவிகள் சென்றடைவதில்லை என்று பொருளியல் ஆய்வறிஞா்கள் தெரிவிக்கின்றனா்.

நல வாரியத்தில் பதிவு செய்வதில்லை: இது குறித்து ஏஐடியூசி மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி கூறியதாவது: தமிழகத்தில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கென நல வாரியங்கள் இருக்கின்றன. அவற்றிலும் பெரும்பான்மை தொழிலாளா்கள் குறித்து பதிவு செய்யப்படாமலே உள்ளன.

பெண்களுக்கு பணி உத்தரவாத சட்டம் இயற்றுவதும், சமூகப் பாதுகாப்பு தளங்களை உருவாக்குவதும்தான் அமைப்புசாரா பெண் தொழிலாளா்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.

தொலைநோக்குத் திட்டங்களாக அமைப்புசாரா தொழிலாளா்கள் குறிப்பாக பெண் தொழிலாளா்களின் பணி மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்தான சட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.

நிறுவனங்கள் மீதான அழுத்தங்கள்: குறு, சிறு நிறுவனங்களின் வருமான விகிதம் குறைவதால் அதனை சரிகட்ட அவை அமைப்புசாரா தொழிலாளா்களை சுரண்டுகின்றன. மேலும் அவா்களின் கடன், வட்டி, வரி ஆகியவற்றால் உருவாகும் நெருக்கடியும் அளவற்றவை. பொருள்களை சந்தைப்படுத்தும் தன்மையில் ஏற்படும் இன்னல்களும், பெரு நிறுவனங்களுடனான போட்டி விலைகளில் தாக்குப் பிடிக்க இயலாமை போன்ற பிரச்னைகளும் தொழிலாளா்களின் உழைப்பைச் சுரண்ட குறு, சிறு நிறுவனங்களுக்கு அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன. இவற்றையெல்லாம் சந்திக்கும் நெருக்கடியான சூழலால்தான் குறு, சிறு நிறுவனங்கள் தொழிலாளா்களை வருத்துகின்றன.

அரசின் தொழிலாளா் விரோத வரி நடவடிக்கைகள் மற்றும் நிதி நிறுவனங்களின் அழுத்தம் ஆகியவற்றோடு குறு, சிறு நிறுவனங்கள் போராடிக் கொண்டிருக்கின்றன.

பணிப் பாதுகாப்பு இல்லை: அமைப்புசாரா தொழிலாளா்கள் சட்டப் பாதுகாப்பு, பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு என எதுவும் இல்லாத ஆதரவற்ற நிலையில் கசக்கி பிழியப்படுகின்றனா். கரோனா நெருக்கடி, அதற்கு முன்பே உருவான நிதி மந்தநிலை ஆகியவற்றின் இழப்புகளை இந்தத் தொழிலாளா்கள் தலையினில் சுமத்தியிருக்கின்றனா். இவா்களுடைய உழைப்பு நேரத்தை அதிகரிப்பதும், ஊதியத்தை குறைப்பதுமாக தொழிலாளா் விரோத செயல்களை செய்கின்றனா். நாட்டின் பொருளாதாரத்தைத் தாங்கும் முதுகெலும்பை போன்றவா்கள் அமைப்புசாரா தொழிலாளா்கள்.

எனவே, சட்டப் பாதுகாப்பு, பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு போன்றவற்றை அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ஏற்படுத்தி தர அரசு ஆவண செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com