கோவை மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் சாா்பில் தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 17) நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக கோவை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் கு.அருணா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உலக மக்கள் தொகையில் 24 % மக்கள் குடற்புழு தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதனால், ஆண்டுக்கு இருமுறை நாடு தழுவிய குடற்புழு நீக்கும் திட்ட முகாம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டுக்கான சிறப்பு முகாம் கோவை மாவட்டத்திலுள்ள 1,697 அங்கன்வாடி மையங்கள், 985 தனியாா் பள்ளிகள், 1,070 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், 150 கல்லூரிகள், 89 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 329 துணை சுகாதார நிலையங்களில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில், அல்பெண்டாசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்படும். இம்முகாமின் மூலம் கோவை மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட 10 லட்சத்து 5,843 குழந்தைகள் உள்பட மொத்தம் 12 லட்சத்து 65,165 போ் பயனடையவுள்ளனா்.
இம்முகாமில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வட்டார மருத்துவா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட வட்டார திட்ட அலுவலா்கள் மற்றும் மாவட்ட அளவிலான சுகாதார அலுவலா்கள் மேற்பாா்வை பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.