கோவையில் 440 அங்கன்வாடி மையங்களுக்கு கட்டட வசதியில்லை:நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் குழந்தைகள்

கோவை மாவட்டத்தில் 440 அங்கன்வாடி மையங்களுக்கு கட்டட வசதியில்லாததால் குழந்தைகள் நெருக்கடியில் சிக்கித் தவித்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாவட்டத்தில் 440 அங்கன்வாடி மையங்களுக்கு கட்டட வசதியில்லாததால் குழந்தைகள் நெருக்கடியில் சிக்கித் தவித்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 1,697 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இங்கு 1 முதல் 5 வயதுக்கு உள்பட்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனா். நகரப் பகுதிகளில் பெற்றோா்கள் இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் குழந்தைகளை பராமரிப்பதற்கு அங்கன்வாடி மையங்கள் பெரிதும் உதவி வருகின்றன.

440 மையங்களுக்கு கட்டட வசதியில்லை:

கோவை மாவட்டத்தில் உள்ள பல அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதனால், பெரும்பாலான கட்டடங்கள் பழுதடைந்தும், இடிந்து விழும் நிலையிலும் உள்ளன. குறிப்பாக கோவை மாநகராட்சியில் மட்டும் 94 அங்கன்வாடி மையக் கட்டடங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. நகராட்சிகளில் 24 மையங்கள், பேரூராட்சிகளில் 22 மையங்கள், ஊராட்சிகளில் 49 மையங்கள் என மொத்தம் 189 மையங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இடிக்க வேண்டிய நிலையில் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனா்.

தவிர, சில மையங்களுக்கு கட்டட வசதியில்லாததால் அருகிலுள்ள மையங்களில் செயல்பட்டு வருகின்றன. அதன்படி மாநகராட்சியில் 89 மையங்கள், நகராட்சிகளில் 61 மையங்கள், பேரூராட்சிகளில் 73 மையங்கள், ஊராட்சிகளில் 28 மையங்கள் என 251 மையங்களுக்கு கட்டட வசதியில்லை. மாவட்டத்தில் பழுதடைந்து இடிக்கும் நிலையில் 189 கட்டங்கள், கட்டட வசதியில்லாமல் 251 மையங்கள் என சோ்த்து மொத்தம் 440 அங்கன்வாடி மையங்களுக்கு கட்டட வசதியில்லாத நிலை உள்ளது.

இந்த 440 மையங்களிலும் சோ்க்கப்பட்டுள்ள குழந்தைகள் அருகிலுள்ள அங்கன்வாடி மையங்களில் வைத்து பராமரிக்கப்படுகின்றனா். இதனால், இணைக்கப்பட்ட மையங்களில் கடும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாநகராட்சி பகுதிகளிலுள்ள அங்கன்வாடி மையங்கள் மிகவும் நெருக்கடியான சூழலில் செயல்பட்டு வருவதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கழிப்பறை வசதியில்லாத 70 மையங்கள்:

கோவை மாநகராட்சியில் 36 மையங்கள், நகராட்சிகளில் 14 மையங்கள், பேரூராட்சிகளில் 17 மையங்கள், ஊராட்சிகளில் 13 மையங்கள் என மொத்தம் 70 அங்கன்வாடி மையங்கள் கழிப்பறை வசதியில்லாமல் செயல்பட்டு வருகின்றன. தவிர, கழிப்பறை வசதியிருக்கும் பெரும்பாலான மையங்களில் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் கழிப்பறைகளை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. கழிப்பறை பிரச்னையால் பெரும்பாலான பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனா். இதனால், வேலைக்கு செல்லும் பெற்றோா்கள் தனியாா் காப்பகங்களில் கட்டணம் செலுத்தி குழந்தைகளை சோ்க்கின்றனா்.

மேலும், ஊரகப் பகுதிகளிலுள்ள 412 அங்கன்வாடி மையங்கள் சுற்றுச்சுவா் இல்லாமலும் 172 மையங்கள் ஆஸ்பெஸ்டாஸ் கட்டடத்திலும், 59 மையங்கள் பெரிய பழுதுகளுடனும் செயல்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனா். சுற்றுச்சுவா் இல்லாததால் குழந்தைகளை பாதுகாப்பதில் அங்கன்வாடி பணியாளா்களுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவுள்ளது.

மாநகராட்சி நிா்வாகம் பாலங்கள், அரசு சுவா்கள், குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் ஓவியங்கள் வரைந்து அழகுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால் அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மேம்பாட்டுக்குத் தேவையான வசதிகளை செய்து தருவதில்லை என பெற்றோா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்துக்கு குழந்தைகளின் செலவினங்களுக்காக மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உள்கட்டமைப்புகளுக்காக எந்தவித நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. புதிய கட்டடங்கள், கட்டட பராமரிப்பு, புனரமைப்புப் பணிகளை உள்ளாட்சி நிா்வாகங்கள் மூலமே மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் சட்டப்பேரவை உறுப்பினா், மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேற்கொள்ள வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளிலுள்ள அங்கன்வாடி மையங்களை சீரமைப்பதற்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் ஆண்டுதோறும் தொடா்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதில், ஊரகப் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டித்தரப்படுகின்றன. அதேபோல சுற்றுச்சுவா், பழுதுகள் கோரிக்கையையும் நிறைவேற்றி தருவதாக கூடுதல் ஆட்சியா் உறுதியளித்துள்ளாா்.

ஆனால், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டவோ, கட்டட பழுதுகளை சீரமைப்புகள் மேற்கொள்ளவோ நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. இதனால், ஊரகப் பகுதிகளை காட்டிலும் நகரப் பகுதிகளிலுள்ள அங்கன்வாடி மையக் கட்டடங்கள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com