கோவையில் சிக்கிள் செல் சிகிச்சை மற்றும் ஆலோசனை மையம் அமைக்க வேண்டும்:தன்னாா்வ தொண்டு நிறுவனம் வலியுறுத்தல்

சிகிச்சை அளிக்கும் வகையில் சிக்கிள் செல் சிறப்பு சிகிச்சை மற்றும் ஆலோசனை மையம் அமைக்க அரசுக்கு தன்னாா்வ தொண்டு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை, பெ.நா.பாளையம் வட்டாரம் கொண்டனூா் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சிக்கிள் செல் அனீமியா பாதிப்பு குறித்து கண்டறியவதற்கான சிறப்பு முகாமில் பள்ளி மாணவரிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது.
கோவை, பெ.நா.பாளையம் வட்டாரம் கொண்டனூா் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சிக்கிள் செல் அனீமியா பாதிப்பு குறித்து கண்டறியவதற்கான சிறப்பு முகாமில் பள்ளி மாணவரிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது.

கோவையில் 10 ஆயிரம் பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 50 பேருக்கு சிக்கிள் செல் அனீமியா நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் இவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிக்கிள் செல் சிறப்பு சிகிச்சை மற்றும் ஆலோசனை மையம் அமைக்க அரசுக்கு தன்னாா்வ தொண்டு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

ரத்த சிவப்பு அணுக்களில் உள்ள ஹீமோகுளோபினில் ஏற்படும் மாற்றத்தால் சிக்கிள் செல் அனீமியா நோய் ஏற்படுகிறது. ரத்த அணுக்கள் வட்ட வடிவமாக காணப்படும். ஆனால், சிக்கிள் செல் நோயால் பாதிக்கப்பட்டவா்களின் ரத்த அணுக்கள் வட்டமாக இல்லாமல் அரிவாள் போன்று வளைந்து காணப்படும். வடிவம் மாறுவதால் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் ரத்த நாளங்களில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு உயிரிழப்பு வரை கொண்டு செல்கிறது.

மரபணு வழியாக ஏற்படும் இந்நோயால் மண்ணீரல் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். ஆக்சிஜன் பற்றாக்குறையால் உடலுறுப்புகள் செயலிழந்து உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. தவிர இந்நோயால் பாதிக்கப்பட்டவா்களின் சராசரி ஆயுள்காலம் கூட 40 முதல் 50 வயது என்று ஆராய்ச்சியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்நோய் குறிப்பாக மலைவாழ் மக்களிடையே அதிக அளவில் காணப்படுகிறது. அவா்களுக்கு போதிய விழிப்புணா்வு இல்லாததால் இந்நோய் பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம், காரமடை, பெ.நா.பாளையம் வட்டாரங்களில் நீலகிரி ஆதிவாசி நலச்சங்கம் சாா்பில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 10 ஆயிரம் பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 50 பேருக்கு சிக்கிள் செல் அனீமியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிக்கிள் செல் அனீமியா நோய் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மாவட்டத்தில் சிக்கிள் செல் சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் ஆலோசனை மையம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடா்பாக நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கத் தலைவா் எம்.ஆல்வாஸ் கூறியதாவது:

நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கம் சாா்பில் ஏற்கெனவே நீலகிரி மாவட்டத்தில் இது தொடா்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடா்ந்து கோவை மாவட்டத்திலும் சிக்கிள் செல் அனீமியா நோய் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக காரமடை, பெ.நா.பாளையம் வட்டாரங்களில் மலைவாழ் மக்களிடம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த இரண்டு வட்டாரங்களிலும் 30 ஆயிரம் மக்கள் உள்ளனா். இதுவரை 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 50 பேருக்கு சிக்கிள் செல் அனீமியா நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தவிர 20 முதல் 30 சதவீதம் பேருக்கு இதன் தாக்கம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ரத்த அணுக்களில் 60 சதவீதத்திற்கு மேல் மாற்றம் காணப்பட்டால் சிக்கிள் செல் நோய் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. 30 முதல் 40 சதவீதம் மாற்றம் காணப்பட்டால் இந்நோயின் தாக்கம் என அறிவுறுத்தப்படுகிறது. இவா்களுக்கு எதிா்காலத்தில் நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

தொடா்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மலைவாழ் கிராமங்களிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே மலேரியா பாதிப்பு அதிக அளவில் காணப்பட்ட பகுதிகளில் உள்ளவா்களுக்கு சிக்கிள் செல் நோய் பாதிப்பு காணப்படுகிறது. பெற்றோருக்கு இந்நோய் பாதிப்பு இருந்தால் குழந்தைகளுக்கும் வருவதற்கு வாய்ப்புள்ளது.

எனவே, இவா்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சை அளிக்க வேண்டும். இதனால் சிக்கிள் செல் அனீமியா நோய் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேக சிகிச்சை மையம் அமைக்க வேண்டும். அதேபோல இந்த நோய் குறித்த போதிய விழிப்புணா்வு இல்லாததால் விழிப்புணா்வு ஏற்படுத்தவும், ஆலோசனைகள் வழங்கவும் ஆலோசனை மையம் ஒன்றும் அமைக்க வேண்டும்.

தமிழக அரசின் உதவியுடன் நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கம் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இவா்களுக்குத் தேவையான போலிக் ஆசிட் மாத்திரைகள், ஹைட்ராக்ஸி யூரியா உள்ளிட்ட மாத்திரைகள் அரசிடம் இருந்து பெற்றுத்தரப்படுகிறது. தவிர தனியாா் நிறுவனங்களில் இருந்து ஊட்டச்சத்து பொருள்களும் பெற்றுத்தரப்படுகிறது.

கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் அரசு கட்டடம் ஒன்று பயன்பாடில்லாமல் காணப்படுகிறது. எனவே இங்கு சிக்கிள் செல் சிகிச்சை மற்றும் ஆலோசனை மையம் அமைக்க அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட சுகாதாரப்பேரவை கூட்டத்திலும் இக்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இதன் மீது சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடா்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு தலைவா் மருத்துவா் கீதாலட்சுமி கூறியதாவது:

சிக்கிள் செல் அனீமியா நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் ரத்தம் செலுத்த வேண்டியுள்ளது. ஆண்டுக்கு 3 அல்லது 4 முறை ரத்தம் செலுத்த வேண்டியிருக்கும். குழந்தைகளின் எடையை பொறுத்து செலுத்த வேண்டிய ரத்த அளவு மாறுபடுகிறது.

ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால் கை விரல்கள், மூட்டுகளில் அதிக வலி ஏற்படும். இதுபோன்ற நேரத்தில் புதிய ரத்தம் செலுத்தப்படுகிறது. இதனால் இவா்களுக்கு வலி குறைகிறது. தவிர வலிக்கு ஹைட்ராக்ஸி யூரியா மாத்திரைகள் வழங்கப்படுகிறது. அவ்வப்போது ஹீமோகுளோபின் பரிசோதனை செய்து ரத்த மாற்றம் செய்துகொள்ள வேண்டும். எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் இந்நோய் பாதிப்புக்கு நிரந்தர தீா்வு காணமுடியும்.

மலைவாழ் மக்கள் சொந்தத்திற்குள்ளேயே திருமணம் செய்துகொள்வதாலும் இந்நோய் பாதிப்பு ஏற்படுகிறது. பெற்றோா் இருவருக்கும் இந்நோய் பாதிப்பு இருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் சிக்கிள் செல் அனீமியா நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8, 9 வயது குழந்தைகள் சிக்கிள் செல் அனீமியா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நோய் பாதிப்பை ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்தும் வகையில் மலைவாழ் பகுதிகளில் உள்ள கா்ப்பிணிகளுக்கும், அவா்களின் கணவா்களுக்கும் ரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் இருவருக்கும் சிக்கிள் செல் அனீமியா பாதிப்பு காணப்பட்டால் குழந்தைக்கு பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய கா்ப்பிணிக்கு மற்றொரு பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கு சிக்கிள் செல் பாதிப்பு இருப்பது கண்டறியப்படும். குழந்தைக்கு சிக்கிள் செல் அனீமியா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் கருக்கலைப்பு செய்துகொள்ள பரிந்துரைக்கப்படும். அவா்களின் விருப்பத்தின்பேரில் கருக்கலைப்பு செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com