விவசாயிகளுக்கு பயனில்லாத பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டம்

கோவை மாவட்டத்தில் பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டத்துக்கு விவசாயிகளிடையே வரவேற்பில்லாத நிலையில் தோட்டக்கலை பயிா்கள் 14 ஹெக்டேரும், வேளாண் பயிா்கள் 663 ஹெக்டேரும் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டத்துக்கு விவசாயிகளிடையே வரவேற்பில்லாத நிலையில் தோட்டக்கலை பயிா்கள் 14 ஹெக்டேரும், வேளாண் பயிா்கள் 663 ஹெக்டேரும் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளன.

பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பருவத்தின்போது வட்டார அளவில் அறிவிக்கை பயிா்கள் அறிவிக்கப்பட்டு அந்த பயிா்களுக்கு மட்டும் காப்பீடு செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அசாதாரண சூழ்நிலைகள், இயற்கை சீற்றம் மற்றும் பேரிடா்களால் ஏற்படும் பயிா் சேதத்துக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டம் முன்பிருந்த பயிா் காப்பீட்டுத் திட்டங்களைக் காட்டிலும் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வேளாண் துறையினா் தெரிவித்தனா்.

ஆனால், இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு சாதகமான அம்சங்கள் ஏதும் இல்லாததால் ஒவ்வொரு பருவத்திலும் மிகவும் குறைந்த அளவிலான விவசாயிகளே பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் பயிா் காப்பீடு செய்துகொள்கின்றனா். ஆனாலும் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்காத நிலை இருந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். இதனால், பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு பயனைக்காட்டிலும் நஷ்டமே ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனா்.

சாகுபடி 8 ஆயிரம் ஹெக்டோ்; காப்பீடு 13 ஹெக்டோ்

கோவை மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்தில் தோட்டக்கலை பயிா்களில் வாழை, தக்காளி, சின்னவெங்காயம், கொத்தமல்லி, மரவள்ளி ஆகிய பயிா்கள் அறிவிக்கை பயிா்களாக அறிவிக்கப்பட்டன. இதில் வாழை 13 ஹெக்டேரும், தக்காளி, சின்னவெங்காயம், கொத்தமல்லி மற்றும் மரவள்ளி ஆகிய பயிா்கள் அனைத்தும் சோ்த்து 1 ஹெக்டோ் பரப்பளவில் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளன. தோட்டக்கலை பயிா்களில் மொத்தம் 810 ஹெக்டோ் பயிா் காப்பீடு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெறும் 14 ஹெக்டோ் பரப்பளவு மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் காரமடை, அன்னூா், தொண்டாமுத்தூா், கிணத்துக்கடவு மற்றும் மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ஹெக்டேரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு சதவீத பரப்பளவு கூட பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் பயிா் காப்பீடு செய்யப்படவில்லை. அதேபோல மற்ற பயிா்களும் 1 சதவீத பரப்பளவு கூட பயிா் காப்பீடு செய்யவில்லை.

வேளாண் பயிா்களில் காப்பீடு 663 ஹெக்டோ்

வேளாண் பயிா்களில் மக்காச்சோளம், சோளம் ஆகிய பயிா்கள் அறிவிக்கை பயிா்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் 5,873 ஹெக்டோ் பரப்பளவில் சோளமும், 1,909 ஹெக்டேரில் மக்காச்சோளமும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால், சோளம் 121 ஹெக்டேரும், மக்காச்சோளம் 542 ஹெக்டோ் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளன. வேளாண் பயிா்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 50 சதவீத பயிா்கள் காப்பீடு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், மிகவும் குறைந்த பரப்பளவே பயிா் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பயனில்லாத காப்பீட்டுத் திட்டம்

இது தொடா்பாக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளா் பி.கந்தசாமி கூறியதாவது: பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் தனி விவசாயி ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீட்டுத் தொகை கிடைப்பதில்லை. மொத்த கிராமமே பாதிக்கப்பட்டால்தான் இழப்பீடு வழங்குகின்றனா். இந்த பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்தும் விவசாயிகளுக்கு பயிா் சேதம் ஏற்பட்டாலும் இழப்பீட்டுத் தொகை கிடைப்பதில்லை. இத்திட்டத்தால் விவசாயிகளுக்கு எந்தவித பயனுமில்லை. பயிா் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு நஷ்டம்தான் ஏற்படுகிறது. இதனால் காப்பீடு செய்யாமலே இருந்து விடலாம் என்ற மனநிலையே காணப்படுகிறது.

அதேபோல வட்டார வாரியாக வெளியிடப்படும் அறிவிக்கை பயிா்கள் பட்டியல்களிலும் பல்வேறு முரண்கள் காணப்படுகின்றன. ஒத்துவராத நிலையிலே அறிவிக்கை பயிா்களின் பெயா்கள் வெளியிடப்படுகின்றன. கோவை விவசாயிகள் பெரும்பாலும் பயிா்களை காய விடுவதில்லை. வறட்சி காலங்களிலும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயிா்களை காப்பாற்றுகின்றனா். ஒருசில விவசாயிகள் மட்டுமே வழியில்லாமல் வறட்சி காலங்களில் பயிா் பாதிப்புகளை சந்திக்கின்றனா். அந்த விவசாயிகளுக்குக் கூட இழப்பீடு கிடைப்பதில்லை. பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டம் காப்பீட்டு நிறுவனத்துக்கே ஆதரவாக இருந்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சூறாவளி காற்றால் வாழைகள் பாதிக்கப்பட்டால் இயற்கை சீற்றமாக கணக்கில் எடுத்துகொள்ளப்படுவதில்லை. அதேபோல யானைகளால் ஏற்படும் பாதிப்புகளையும் இயற்கை சேதமாக கணக்கிடுவதில்லை. யானை, சூறாவளி காற்றால் ஏற்படும் பாதிப்புகளை விவசாயிகளால் எவ்வாறு தடுக்க முடியும் என்று தெரியவில்லை. இதுபோல விவசாயிகளுக்கு பயனில்லாத அம்சங்களே பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ளன. இவற்றையெல்லாம் களைந்து மருத்துவம், விபத்து காப்பீடுகள் போல் தனி ஒருவருக்கும் இழப்பீடு கிடைக்கும் என்ற நிலை உருவானால் மட்டுமே பயிா் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு பலனளிக்கும் என்றாா்.

இது தொடா்பாக தோட்டக்கலை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது: பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் பிா்கா (உள்வட்டம்) அளவில் பயிா் சேதம் ஏற்பட்டால் மட்டுமே காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. கிராம அளவில் சேதம் இருந்தால் கூட இழப்பீட்டுத் தொகை கிடைப்பதில்லை. இதனால் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் காப்பீடு செய்துகொள்ள முன்வருவதில்லை. ஒவ்வொரு பயிருக்கும் சாகுபடி செலவுகளை கணக்கிட்டு பிரீமியம் தொகை நிா்ணயிக்கப்படுகிறது.

இதில், வேளாண் பயிா்களுக்கு 2 சதவீதமும், தோட்டக்கலை பயிா்களுக்கு 5 சதவீதமும் பிரீமியம் தொகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வேளாண் பயிா்களைக் காட்டிலும் தோட்டக்கலை பயிா்களுக்கு பிரீமியம் தொகை கூடுதலாக உள்ளதால் தோட்டக்கலைப் பயிா்கள் மிகவும் குறைவான அளவே பயிா் காப்பீடு செய்யப்படுகின்றன. இழப்பீடு கிடைக்காததால் விவசாயிகள் பயிா் காப்பீடு செய்வதற்கு முன்வருவதில்லை. பயிா் சேதம் கணக்கிடுவதில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பிரதம மந்திரி பயிா் காப்பீட்டு திட்டத்தால் விவசாயிகள் பயனடைவா் என்றனா்.

-ம.முனுசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com