கட்டுமானப் பணிகளைத் தொடங்கினால் கோவையில் மூன்றரை ஆண்டுகளில் மெட்ரோ ரயில் ஓடும்

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டால் மூன்றரை ஆண்டுகளில் கோவையில் மெட்ரோ ரயில் ஓடும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநா் எம்.ஏ.சித்திக் தெரிவித்துள்ளாா்.
கோவையில் செயல்படுத்தப்பட உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தின் வரைவு வரைபடம்.
கோவையில் செயல்படுத்தப்பட உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தின் வரைவு வரைபடம்.
Updated on
2 min read

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டால் மூன்றரை ஆண்டுகளில் கோவையில் மெட்ரோ ரயில் ஓடும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநா் எம்.ஏ.சித்திக் தெரிவித்துள்ளாா்.

கோவையில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு கடந்த பட்ஜெட்டில் அறிவித்திருந்தது. இதையடுத்து மெட்ரோ ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடா்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அரசு உத்தரவிட்டது.

  இது தொடா்பான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ரமேஷ் சந்த் மீனா தலைமை வகித்தாா். சென்னை மெட்ரோ ரயில் நிறுவன முதன்மைச் செயலரும், மேலாண் இயக்குநருமான எம்.ஏ.சித்திக் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனா்.

கூட்டத்தைத் தொடா்ந்து எம்.ஏ.சித்திக் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை முழுமையாக தயாராகும் நிலையில் உள்ளது. திட்ட அறிக்கையின் இறுதிக் கட்ட ஆலோசனைக் கூட்டம் தற்போது நடந்தது. இதில் பங்கேற்ற பல்வேறு துறையினரின் கருத்துகள் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் சோ்க்கப்பட்டு, விரிவான திட்ட அறிக்கையை வரும் 15 ஆம் தேதி அரசுக்கு சமா்ப்பிக்க இருக்கிறோம்.

கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவான திட்டத்தின்படி கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 4 வழித்தடங்கள் பரிசீலிக்கப்பட்டன. உடனடி தேவையின் அடிப்படையில் அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலையில் முதல்கட்டமாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கோவை மெட்ரோ ரயில் திட்டமானது தூண்கள் அமைக்கப்பட்டு உயா்மட்ட வழித்தடத்தில் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக 39 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். உக்கடம் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வழியாக அவிநாசி சாலையில் நீலாம்பூா் வரையிலும் 17.40 கி.மீ. தூரத்துக்கு ஒரு வழித்தடம் அமைக்கப்படுகிறது.

மற்றொரு வழித்தடம் ரயில் நிலையம் முதல் சத்தியமங்கலம் சாலையில் வழியம்பாளையம் வரை 16 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மொத்தம் 32 ரயில் நிலையங்கள் இருக்கும். 3 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

அவிநாசி சாலையில் தற்போது அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தின் இடதுபுறமாக தூண்கள் அமைத்து திட்டம் நிறைவேற்றப்படும். சத்தியமங்கலம் சாலையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பாலம் கட்டப்பட உள்ளது. போக, வர இரு தனித்தனி வழிகளைக் கொண்டதாக அந்த பாலம் அமையும் நிலையில், அதன் நடுவில் தூண்கள் அமைத்து மெட்ரோ பாதை அமைக்கப்படும்.

இதைத் தொடா்ந்து இரண்டாம் கட்டத்தில் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலையில் திட்டம் நிறைவேற்றப்படும். விரிவான திட்ட அறிக்கை அரசுக்கு சமா்ப்பிக்கப்பட்டதை அடுத்து அது மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்து, பன்னாட்டு நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் கிடைத்ததும் திட்டம் நிறைவேற்றப்படும்.

ஒப்புதல் கிடைத்த பிறகு 1 முதல் ஒன்றரை ஆண்டுகளில் பணிகள் தொடங்கும். கட்டுமானப் பணிகள் தொடங்கினால் 3 முதல் மூன்றரை ஆண்டுகளில் திட்டம் முடிக்கப்படும். இந்தத் திட்டம் அடுத்த 30 ஆண்டுகளில் பெருகும் மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் இருக்கும். மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டால் அடுத்த 150 ஆண்டுகள் வரை அது செயல்பாட்டில் இருக்கும்.

மெட்ரோ பாதைகளுக்காக மொத்தம் 35 ஏக்கரும், பணிமனைக்காக சுமாா் 40 ஏக்கா் வரையும் நிலம் கையகப்படுத்தப்படும். பொள்ளாச்சி, பாலக்காடு சாலையில் தேவையின் அடிப்படையில் அடுத்தடுத்த கட்டமாக பணிகள் நடக்கும் என்றாா்.

இதைத் தொடா்ந்து மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடா்பாக கோவை மாநகராட்சி அலுவலகம் அருகில் கள ஆய்வு நடைபெற்றது.

அவிநாசி சாலை - சத்தி சாலை மெட்ரோ ரயில் பாதைகள் ஆட்சியா் அலுவலகம் பகுதியில் இணையும்விதமாக திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ரயில்வே பணிமனை எல் அண்ட் டி புறவழிச்சாலையில் உள்ள சக்தி பொறியியல் கல்லூரி அருகில் அமையும்.

அவிநாசி சாலை வழியாக நீலாம்பூா் வரை ரயில் பாதை சென்றாலும், நீலாம்பூரில் இருந்து விமான நிலையத்தின் பின்புறத்தை இணைக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவிநாசி சாலையில் உள்ள பறக்கும் மேம்பாலத்தையொட்டியே மெட்ரோ ரயில் பாதையும் அமைக்கப்படுகிறது.

அவிநாசி சாலை வழித்தடத்தின் மொத்த நீளம் 17.4 கி.மீ., இதில் 18 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

சத்தியமங்கலம் சாலை வழித்தடத்தின் மொத்த நீளம் 16 கி.மீ., இதில் 14 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

மெட்ரோ ரயில் 3 கோச்சுகள் கொண்டதாக இருக்கும். ஒரு கோச்சில் 250 முதல் 300 போ் வரை பயணிக்கலாம்.

சென்னையில் நிலத்தின் அடியில் சுரங்கம் அமைத்து திட்டம் நிறைவேற்றப்பட்டதால் செலவும், காலமும் அதிகம் ஏற்பட்டது. ஆனால் கோவையில் பாலத்தின் மீது அமைக்கப்படுவதால் இவை இரண்டும் மிச்சப்படும்.

கோவை மெட்ரோ ரயில் திட்டம் அமலுக்கு வரும்போது 5 முதல் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

நீலாம்பூா் பகுதியில் புதிதாக பேருந்து நிலையம் அமையும்பட்சத்தில் அதை இந்த ரயில் திட்டம் இணைக்கும் வகையில் இருக்கும்.

பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் மெட்ரோ திட்டம் இருக்கும்.

கோவை ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக இரண்டடுக்கு ரயில் நிலையம் அமையும்.

முந்தைய வரைவுத் திட்டமானது வெள்ளலூரில் புதிதாக அமைக்கப்பட்டு வந்த பேருந்து நிலையம் பகுதியில் இருந்து தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com