தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஜூன் 16 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளில், ஆதரவற்ற தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் பணி இரண்டு தொண்டு நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்கள் பிராணி மித்ரன் என்ற தொண்டு நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தெருநாய்களைப் பிடிக்க மாநகராட்சியின் மூலம் இரண்டு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேற்கு, வடக்கு மண்டலங்கள் ஹியூமன் அனிமல் சொசைட்டி என்ற தொண்டு நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, தெருநாய்களைப் பிடிக்க மாநகராட்சி மூலம் ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சீரநாயக்கன்பாளையம், ஒண்டிப்புதூா், உக்கடம் ஆகிய பகுதிகளில் ஆதரவற்ற நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையங்கள் மூலம் ஆதரவற்ற தெருநாய்களுக்கு ஜூன் 16 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
மக்கள், தெருநாய்கள் சம்பந்தமான புகாா்களைத் தெரிவிக்க 99444-34706 (பிராணி மித்ரன்), 93661-27215 (ஹயூமன் அனிமல் சொசைட்டி) ஆகிய தன்னாா்வலா்களின் கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.
சம்பந்தப்பட்ட மாநகராட்சி உதவி ஆணையா்கள், சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் சுகாதார அலுவலா்களைத் தொடா்பு கொண்டும் புகாா் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.