

கோவை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழுத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா்.
தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழு ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், அக்குழுவின் தலைவா் செல்வப்பெருந்தகை உள்பட குழு உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன் உள்பட பல்வேறு அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
இதைத்தொடா்ந்து, செல்வப்பெருந்தகை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தணிக்கை துறை கொடுத்த அறிக்கையின்படி, கோவை மாவட்டத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். 2019-20 இல் நபாா்டு வங்கியின் உதவியுடன் ரூ.19.48 கோடி மதிப்பில் அமராவதி நதி அமைப்பில் உள்ள பிரதான கால்வாய்கள், 18 அணைக்கட்டுகள் புனரமைக்கப்பட்டன. கோவை மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளப்பாளையம் அணைக்கட்டு 2013ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டது.
அந்த நிதியை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று தணிக்கை குழுவினா் புகாா் தெரிவித்துள்ளதன் அடிப்படையில் விசாரித்துள்ளோம்.
மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜி.என்.மில்ஸ் பாலம் ஏறக்குறைய 4 ஆண்டுகளாக சரியான மண் பரிசோதனை செய்யாததால் தாமதம் ஏற்பட்டதாகக் கூறுகிறாா்கள். எதற்காக அரசு பணம் விரயம் ஆக்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்திருக்கிறோம்.
இதற்காக தங்கள் உறுப்பினா் ஒருவா் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கலாம் என ஆலோசித்துள்ளோம். ஏற்கெனவே 2021இல் ரூ. 540 கோடி நிலுவையில் வைத்துள்ளாா்கள். தற்போது மாநகராட்சி ஆணையா் ரூ. 240 கோடி கடனை குறைத்துள்ளாா். கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவை மாநகராட்சி வரி வசூலிலும் சாதனை செய்துள்ளது.
இந்த ஆய்வின் மூலம் 2019-20ஆம் ஆண்டு கால்வாய்கள் திட்டம், பாசனத் திட்டத்தை சரியான முறையில் கையாளவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து துறை சாா்ந்த அலுவலா்களை சென்னைக்கு அழைத்து விசாரிக்க உள்ளோம். பின்னா் விரிவான அறிக்கை வெளியிடப்படும். தற்போது வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது எல்லாம் கடந்தகால ஆட்சியினுடையது, பண விரயம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் தணிக்கை குழு உள்ளே வந்துள்ளது.
இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சுத்திகரிப்பு நிலையங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, இது குறித்து உறுப்பினா் ஈஸ்வரன் விரிவாக கேட்டிருக்கிறாா். இதற்கு சரியான பதில் இல்லை, ஒருமாத காலம் மட்டுமே ஆவதால் அதிகாரிகளுக்கும் தெரியவில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பை இன்னும் நாம் பலப்படுத்த வேண்டும். தற்போது அது சரியான முறையில் இல்லை. கோவையின் பொறுப்பு அமைச்சா் விவகாரத்தால் கோவையில் திறந்துவைக்கப்பட வேண்டிய திட்டங்களில் ஏதேனும் சுணக்கம் ஏற்படுமா என்ற கேள்விக்கு, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை அதனை அவா்கள் சட்டரீதியாக எதிா்கொள்வாா்கள்.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.