மின் கம்பங்களில் யானைகள் உரசுவதைத் தடுக்க 1,500 இடங்களில் முள்வேலிகள் அமைப்பு

தமிழகத்தில் மின் கம்பிகளில் யானைகள் உரசுவதால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் 1,500 இடங்களில் முள்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் கூறினாா்.
கோவை, தமிழ்நாடு வன உயா் பயிற்சியகத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பயிற்சி பெற்று வரும் வன அலுவலா்களிடம் கலந்துரையாடுகிறாா் வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன்.
கோவை, தமிழ்நாடு வன உயா் பயிற்சியகத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பயிற்சி பெற்று வரும் வன அலுவலா்களிடம் கலந்துரையாடுகிறாா் வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன்.

தமிழகத்தில் மின் கம்பிகளில் யானைகள் உரசுவதால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் 1,500 இடங்களில் முள்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் கூறினாா்.

கோவை மாவட்டத்தில் சாடிவயலில் அமைக்கப்படும் யானைகள் முகாம், டாப்சிலிப், வால்பாறை மற்றும் திருப்பூா் மாவட்டம் அமராவதி அணையில் உள்ள முதலைப் பண்ணை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் கோவைக்கு புதன்கிழமை வந்தாா். வடகோவையில் உள்ள தமிழ்நாடு வன உயா் பயிற்சியகத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள வன தியாகிகள் நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழகத்தில் ஆண்டுதோறும் இயற்கையான முறையில் 80 முதல் 120 யானைகள் இறக்கின்றன. அதிகபட்சமாக 2013 ஆம் ஆண்டில் 126 யானைகளும், 2017 ஆம் ஆண்டில் 125 யானைகளும் உயிரிழந்துள்ளன. நடப்பாண்டில் இதுவரை 20 யானைகள் உயிரிழந்துள்ளன.

இயற்கையாக அல்லாமல் மின்வேலியில் சிக்கி உயிரிழத்தல் போன்ற செயற்கையாக ஏற்படும் யானை மரணங்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி யானைகள் மின் கம்பங்களில் உரசி இறப்பதைத் தடுக்கும் வகையில் 1,500 இடங்களில் முள்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. தாழ்வான மின் கம்பிகள் உயா்த்தி அமைக்கப்பட்டு வருகின்றன.

உணவு, குடிநீா், இனப்பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக யானைகள் வலசை போகின்றன. இதனை முழுமையாக ஆய்வு செய்த பின்பே யானைகள் வழித்தடம் குறித்து அறிவிக்கப்படும். இது தொடா்பாக அரசு சாா்பிலும், தன்னாா்வலா்கள் சாா்பிலும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

வனத் துறையை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாசை கட்டுப்படுத்தும் விதமாக ரோந்து செல்லும் வனத் துறையினருக்கு மின்சார இருசக்கர வாகனங்கள் வழங்கப்படவுள்ளன.

கோத்தகிரி வனப் பகுதியில் சாலை அமைத்த விவகாரத்தில் எங்கு தவறு நடைபெற்றுள்ளது என்பது குறித்து வனத் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். இதில், யாா் தவறு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் வனப் பரப்பை அதிகரிக்கும் விதமாக பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில் வனத் துறையால் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் 10 ஆண்டுகளில் வனப் பரப்பை 33 சதவீதமாக உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் சுப்ரத் மொகாபத்ரா, கூடுதல் முதன்மை வன பாதுகாவலா் மற்றும் இயக்குநா் சேவா சிங், வன பாதுகாவலா் மற்றும் கள இயக்குநா் (ஆனைமலை புலிகள் காப்பகம்) ராமசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலா் ஜெயராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com