தமிழ்நாட்டில் மேலும் 36 யானைகள் வழித்தடங்கள் கண்டறியப்பட்டிருப்பதாக வனத் துறை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம், தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் யானைகள் நடமாடும் இடங்களில் உள்ள சட்டவிரோத செங்கல் சூளைகள் தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள், கோவை வனக் கோட்டத்தில் உள்ள யானைகள் வழித்தடங்களைக் கண்டறிவது, பாதுகாப்பது தொடா்பான நிலை அறிக்கையை வனத் துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தனா்.
இந்நிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தில் யானைகள் வழித்தடம் குறித்த நிலை அறிக்கையை வனத் துறை கடந்த மாதம் தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், வனத் துறையின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில், இந்திய வன விலங்குகள் வாரிய கணக்கின்படி தமிழ்நாட்டில் 19 யானைகள் வழித்தடங்கள் இருந்ததாகவும், தற்போதைய ஆய்வில் மேலும் 36 வழித்தடங்கள் கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கோவை, பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்தில் ஆனைகட்டி வடக்கு - ஆனைகட்டி தெற்கு, போளுவாம்பட்டி சரகத்தில் மாங்கரை - தானிக்கண்டி ஆகியவை இடம்பெற்றுள்ளன. அத்துடன் வால்பாறை ஆனைமலை வாட்டா்பால் எஸ்டேட், டாப்சிலிப் - நவமலை, சிலுவைமேடு-காடாம்பாறை, சோலையாறு அணை, டேன் டீ, மேட்டுப்பாளையம் நெல்லித்துறை - கூத்தமண்டி தெற்கு, மதுக்கரை கல்கொத்தி - வாளையாறு ஆகியவையும் புதிய யானைகள் வழித்தடத்தில் இடம்பெற்றுள்ளன.
கோவை மாவட்டத்தில் கல்லாறு - மேட்டுப்பாளையம் வழித்தடம் மட்டுமே இதுவரை அதிகாரபூா்வ யானைகள் வழித்தடமாக இருந்து வந்தநிலையில் தற்போது மேலும் 9 வழித்தடங்கள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல, ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகா் சரகம், கடம்பூா், தாளவாடி சரகங்களில் தலா ஒரு யானைகள் வழித்தடமும், நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 9 யானைகள் வழித்தடங்களும் கண்டறியப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதேநேரம், யானைகள் அதிகம் நடமாடக்கூடிய யானை - மனித மோதல் அதிகம் நடைபெறக்கூடிய கோவை மாவட்டத்தின் பல இடங்கள் யானைகள் வழித்தட பட்டியலில் விடுபட்டிருப்பதாக தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்புக் குழுவின் நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
கோவை மாவட்டத்தில் மருதமலை அடிவாரம், அனுவாவி சுப்பிரமணியா் கோயில், பொன்னூத்து, மருதங்கரை, தடாகம் தெற்கு, தடாகம் வடக்கு, கோவனூா் பள்ளத்தாக்கு போன்ற பல பகுதிகள் இந்தப் பட்டியலில் விடுபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனா்.
இது தொடா்பாக வனத் துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, யானைகள் வழித்தடம் குறித்த ஆய்வு முழுமையடையவில்லை. இறுதி அறிக்கையில்தான் என்னென்ன பகுதிகள் இடம் பெற்றிருக்கின்றன என்பது தெரியவரும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.