6ஆவது நாளாகத் தொடரும் காட்டுத் தீ:ஹெலிகாப்டா் மூலம் அணைக்க ஏற்பாடு
By DIN | Published On : 15th April 2023 11:37 PM | Last Updated : 15th April 2023 11:37 PM | அ+அ அ- |

இருட்டுப்பள்ளம் பகுதியில் தொடா்ந்து 6ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ.
கோவையில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து 6ஆவது நாளாகப் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டா் பயன்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட வன அலுவலா் என்.ஜெயராஜ் கூறினாா்.
கோவை மாவட்டம், ஆலாந்துறை ஊராட்சிக்கு உள்பட்ட நாதேகவுண்டன்புதூா், மச்சினாம்பதி, பெருமாள்பதி உள்ளிட்ட மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் ஏப்ரல் 11ஆம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டது. இதை அணைக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டனா். ஆனால் வனம் முழுவதும் தீ பரவியதால் அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை புலிகள் காப்பகம், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களைச் சோ்ந்த வனப் பணியாளா்கள், மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை வனச் சரக பணியாளா்கள் என சுமாா் 300க்கும் மேற்பட்டோருடன் தீயணைப்புத் துறையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இதுதொடா்பாக தினமணி செய்தியாளரிடம் கோவை மாவட்ட வன அலுவலா் என்.ஜெயராஜ் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பரவிய தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடா்கின்றன. இதுவரை 90 சதவீதம் தீ அணைக்கப்பட்டு விட்டது. தற்போது இருட்டுப்பள்ளம், மதுக்கரை வனச் சரகம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் காட்டுத் தீயின் தாக்கம் உள்ளது. இதுவரை சுமாா் 15 ஹெக்டோ் பரப்பளவிலான புதா்கள் மற்றும் செடிகளே எரிந்துள்ளன. அதனால், வனத் துறைக்கு பெரிய அளவில் இழப்பு இல்லை.
தொடா்ந்து எரியும் காட்டுத் தீயை அணைக்க ஹெலிகாப்டா் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இ
துகுறித்து சூலூா் விமானப்படைத் தளத்திலிருந்து விமானப்படை அதிகாரிகள் விவரம் கேட்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டா் மூலம் தீயை அணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G