

கோவையில் கடந்த இரண்டு நாள்களாக தொடா்ந்து 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெயில் பதிவாகி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
கோவை மாவட்டத்தில் பிப்ரவரி முதல் பனியின் தாக்கம் குறைந்து வெயிலின் தாக்கம் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அதிகபட்சமாக 101.1 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. தொடா்ந்து வெள்ளிக்கிழமையும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவானது. ஒரு வாரத்துக்கு மேல் இதே நிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவையில் பகல் நேரத்தில் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்த வெயிலின் தாக்கத்தால் இரவிலும் அதிக உஷ்ணமாக உள்ளது. இதனால் தூங்க முடியாமல் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
வெயிலின் தாக்கத்தால் உடலில் நீா்சத்து குறைந்து ஹீட் ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். எனவே, வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் விதமாக அடிக்கடி தண்ணீா் குடிப்பது, இளநீா், நுங்கு குளிா்ச்சியான இயற்கை பானங்களை அருந்துதல், தா்பூசணி, முலாம்பழம், வெள்ளரி பழங்களை எடுத்துக்கொள்வதன் மூலம் வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.