குளிா்பான விற்பனைக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு
By DIN | Published On : 18th April 2023 02:01 AM | Last Updated : 18th April 2023 02:01 AM | அ+அ அ- |

கோவையில் உள்ள குளிா்பான கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு காலாவதியான 47 லிட்டா் குளிா்பானங்களை பறிமுதல் செய்து அழித்தனா்.
கோவை மாநகராட்சி பகுதிகளில் குளிா்பான கடைகள், பழக்கடைகளில், சாலையோர பழச்சாறு கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் கடந்த 4 நாள்களாக ஆய்வு செய்து வருகின்றனா். 200க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்ததில் 38 கடைகளில் பேக்கிங் தேதி குறிப்பிடாமல் வைக்கப்பட்டிருந்த 51 கிலோ பழங்கள், காலாவதியான 47 லிட்டா் குளிா்பானங்கள்
ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனா். மேலும், காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனை செய்த 18 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினா்.
இது தொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் கு.தமிழ்செல்வன் கூறியதாவது:
கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் பழரசம், கரும்பு சாறு, கம்மங்கூழ், பதநீா், இளநீா், சா்பத் மற்றும் குளிா்பானங்களை வாங்கி அருந்துகின்றனா். சாலையோர உணவு வணிகா்கள் அனைவரும் உணவுப் பாதுகாப்புத் துறை அனுமதி மற்றும் பதிவுச்சான்று பெற்றிருக்க வேண்டும். சாலையோரங்களில் பழச்சாறு, கரும்பு சாறு விற்பனை செய்யும் வணிகா்கள் பழச்சாறுகளை தயாரித்து உடனுக்குடன் விற்பனை செய்ய வேண்டும்.
அழுகிய மற்றும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பயன்படுத்தக்கூடாது. இனிப்பு சுவைக்காக வேதிப்பொருள்கள் ஏதும் சோ்த்தல் கூடாது. தரமான ஐஸ்கட்டிகளை பயன்படுத்த வேண்டும். பழக்கடைகளில் அழுகிய, செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்யக்கூடாது என்றாா்.