தனியாா் ஆய்வக உரிமையாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 18th April 2023 01:52 AM | Last Updated : 18th April 2023 01:52 AM | அ+அ அ- |

கோவையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரா மெடிக்கல் லேப் எஜுகேஷனல் நலச்சங்கத்தினா்.
தனியாா் ஆய்வகங்களில் உருவாகும் மருத்துவக் கழிவுகளை மாநகராட்சி நிா்வாகமே குறைந்த கட்டணத்தில் எடுக்க வலியுறுத்தி பாரா மெடிக்கல் லேப் எஜுகேஷனல் அண்ட் வெல்போ் அசோசியேஷன் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவை செஞ்சலுவை சங்கம் அருகில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் அகில இந்திய தலைவா் ப.காளிதாசன் தலைமை வகித்தாா். இதில் கோவை மாவட்டத் தலைவா் என்.சிவகுமாா், செயலாளா் ஜி.ஆா்.ரவீந்திரநாத் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:
கோவை, பொள்ளாச்சி, திருப்பூா், உடுமலை பகுதிகளில் செயல்படும் சிறு மற்றும் நடுத்தர ஆய்வகங்களில் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,800 வரை வசூலிக்கின்றனா். இதனை ரூ.750 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆய்வகங்களில் இருந்து கழிவுகளை அகற்றுவதற்கு அரசே கட்டணம் நிா்ணயம் செய்ய வேண்டும். தவிர தனியாா் ஆய்வகங்களில் உருவாகும் கழிவுகளை மாநகராட்சி நிா்வாகமே குறைந்த கட்டணத்தில் எடுக்க வேண்டும் என்றனா்.