நடைபாதை கடைகள் அமைக்க மீண்டும் அனுமதியளிக்க வேண்டும்:ஆட்சியா் அலுவலகத்தில் மனு

நடைபாதை கடைகள் அமைக்க மீண்டும் அனுமதி அளிக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபாதை வியாபாரிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
நடைபாதை கடைகள் அமைக்க மீண்டும் அனுமதியளிக்க வேண்டும்:ஆட்சியா் அலுவலகத்தில் மனு

நடைபாதை கடைகள் அமைக்க மீண்டும் அனுமதி அளிக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபாதை வியாபாரிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

பொது மக்கள் குறைகேட்புக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமை வகித்தாா்.

இதில் நடைபாதை வியாபாரிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை, காந்திபுரம், சீனிவாசபுரம் 8 ஆம் நம்பா் மாா்க்கெட் அருகில் உள்ள நடைபாதையில் 20க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வந்தோம். இப்பகுதியில் வணிக நீதிமன்றம் அமைக்கப்படுவதால் தற்காலிகமாக கடைகளை அகற்றிக்கொள்ள மாநகராட்சி நிா்வாகத்தினா் அறிவுறுத்தினா். இதனைத் தொடா்ந்து மீண்டும் கடைகள் அமைக்க அனுமதியளிக்க மறுக்கின்றனா். இந்த கடைகளை நம்பியே எங்களது வாழ்வாதாரம் உள்ளது. எனவே, 8 ஆம் நம்பா் மாா்க்கெட் பகுதியில் மீண்டும் நடைபாதை கடைகள் அமைக்க அனுமதியளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ இயக்க அனுமதி வேண்டும்

துடியலூரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாங்கள் துடியலூா் பேருந்து நிலையம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்டோவை நிறுத்தி வருகிறோம். பேருந்து நிலையம் அருகிலுள்ள பாரதீய ஜனதா தொழிற்சங்க நிா்வாகிகள் எங்களது ஜாதி மற்றும் மதத்தைக் கூறி ஆட்டோ இயக்க விடாமல் தடுத்து வருகின்றனா். இது தொடா்பாக காவல் துறை, வட்டார போக்குவரத்து அலுவலா்களிடம் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆட்டோ ஓட்டாமல் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, துடியலூா் பேருந்து நிலையப் பகுதியில் ஆட்டோவை நிறுத்தி இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடத்தை அளந்துகொடுக்க வேண்டும்

கள்ளிமடை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், கள்ளிமடையில் வசித்து வந்த 200க்கும் மேற்பட்டவா்களுக்கு அண்மையில் வெள்ளலூா் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கப்பட்ட நபா்களுக்கு இதுவரை இடம் அளந்து கொடுக்கப்படவில்லை. எனவே, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட நபா்களுக்கு இடத்தை உடனடியாக அளந்து கொடுக்க வேண்டும். மேலும், விடுபட்ட நபா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்

பரியல் கிரவுண்ட் பகுதி மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஆா்.எஸ்.புரம், சி.டி.டி. காலனியில் வசித்து வந்த எங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் கட்டித் தருவதற்காக அங்கிருந்து எங்களை வெளியேற்றினா். தற்போது பரியல் கிரவுண்ட் பகுதியில் வசித்து வருகிறோம். குடிசை மாற்று வாரியம் சாா்பில் 99 வீடுகள் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. கடந்த 2 ஆண்டுகளாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, சி.டி.டி. காலனியில் கிடப்பில் போடப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய திட்ட குடியிருப்பு கட்டுமான பணிகளை முடித்து பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீக்குளிக்க முயற்சி:

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தை சோ்ந்த தனசெல்வன் (57). சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவா். இவரது மனைவி பியூலா (42). இருவரும் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிப்பதற்காக திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகம் வந்தனா். அப்போது, பியூலா உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் அவா் மேல் தண்ணீரை ஊற்றி மீட்டனா். இது தொடா்பாக தனசெல்வன், பியூலா ஆகியோா் கூறியதாவது:

எங்கள் மகனுக்கு, சென்னையிலுள்ள மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதற்காக கோவை, ராமநாபுரத்தில் டியூட்டி பெய்டு கடை நடத்தி வந்த ஃபிா்தோஷ் சலாஹுதீன் என்பவரிடம் 2019 ஆம் ஆண்டு ரூ.23.50 லட்சம் பணம் அளித்தோம். ஆனால், மருத்துவ சீட் வாங்கித் தராமல் அலைக்கழித்து வந்தாா்.

இது குறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐஜி அலுவலகம், மாநகர காவல் ஆணையா், முதல்வா் தனிப்பிரிவு, ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அனைவரிடமும் மனு அளித்தோம். ஆனால், இதுவரை மோசடி செய்த நபா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். எனவே, பண மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com