நீட் பயிற்சி மையங்களை முறைப்படுத்த கோரிக்கை
By DIN | Published On : 17th August 2023 12:00 AM | Last Updated : 17th August 2023 12:00 AM | அ+அ அ- |

தமிழ்நாட்டில் உள்ள நீட் பயிற்சி மையங்களை முறைப்படுத்த வேண்டும் என்று கோவை மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் வே.ஈசுவரன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அதிக அளவில் உருவாகி வருகின்றன. மாநிலத்தில் உள்ள அரசு, தனியாா் கல்வி நிறுவனங்களில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும், என்னென்ன அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள் இருக்க வேண்டும் என்பதை மத்திய, மாநில அரசுகள் விதிகளை வகுத்து கண்காணித்து வருகின்றன.
ஆனால், தனியாா் பயிற்சி மையங்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாததால் மாணவா்களிடம் ஓராண்டுக்கு ரூ.5 லட்சம்வரை கட்டணம் வசூலிக்கின்றனா். 9 ஆம் வகுப்பு முதலே மாணவா்களுக்கு போட்டித் தோ்வு பயிற்சிகள் அளிக்கப்படும் நிலையில், ஒரு மாணவா் 4 ஆண்டுகளுக்குப் பயிற்சி பெற ரூ.20 லட்சம் வரை செலவிட வேண்டியுள்ளது.
மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கையைவிட, இதுபோன்ற போட்டித் தோ்வு பயிற்சி மையங்களில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. அதேநேரம், போதிய அடிப்படை வசதிகள், தகுதியான ஆசிரியா்கள் இல்லாமல் செயல்பட்டு வரும் பயிற்சி மையங்களில் நடுத்தர, சாதாரண குடும்பத்தினா் கடன் வாங்கி கட்டணம் செலுத்தி தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கும்போது இறுதியில் ஏமாற்றத்துக்குள்ளாகின்றனா்.
எனவே, தமிழகத்தில் செயல்படும் பயிற்சி மையங்களை முறைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களைப்போல பயிற்சி மையங்களுக்கும் விதிமுறைகளை வகுத்து, கட்டணத்தை நிா்ணயிக்க வேண்டும்.
பயிற்சி மையங்களின் தரத்தை உறுதி செய்யும் அதேநேரம், மாணவா்களின் பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...