கோவை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாதுக்கு சரக்கு விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என விமான நிலைய இயக்குநா் செந்தில்வளவன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
கோவை சா்வதேச விமான நிலையத்தில் தற்போது தினமும் 28 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஓடுதள பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் காரணத்தால் தினமும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை விமானங்கள் இயக்கப்படுவதில்லை. பராமரிப்புப் பணிகள் ஒரு மாதத்திற்குள் முடிவடைந்துவிடும். அதன் பின்னா் 24 மணி நேர விமானப் போக்குவரத்து தொடங்கும். உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் சரக்கு போக்குவரத்தும் கையாளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் பிரத்யேக சரக்கு விமானப் போக்குவரத்தை தொடங்கி உள்ளது. இதில் முதல்கட்டமாக தில்லி, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் கோவை நகரங்களுக்கு இடையே சரக்கு விமானப் போக்குவரத்து தொடங்கப்படுகிறது. இதற்காக கோவையில் இருந்து பெங்களூரு, ஹைதராபாதுக்கு பிரத்யேக சரக்கு விமான சேவை சோதனை ஓட்டம் கடந்த 15 நாள்களாக நடைபெற்று வருகிறது. மாா்ச் மாதத்தில் இருந்து தொடா் சரக்கு விமானப் போக்குவரத்து தொடங்கும். இதற்காக செலவாகும் எரி பொருளின் அளவு, சரக்குகள் கையாளும் திறன், நேர மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து
சோதனை ஓட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டன. கோவையில் இருந்து சரக்கு விமான சேவையை செயல்படுத்தும் அதிகாரப்பூா்வ அறிவிப்பை அமேசான் நிறுவனம் விரைவில் வெளியிடும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.