கோவை பட்டாசுக் கடையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கோவை காா் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடைய அசாருதீன் பட்டாசு வாங்கிய கடையில் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

கோவை காா் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடைய அசாருதீன் பட்டாசு வாங்கிய கடையில் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

கோவை கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபா் 23ஆம் தேதி காா் குண்டு வெடித்தது. இதில் அந்த காரை ஓட்டி வந்த ஜமேஷா முபீன் அங்கேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக என்ஐஏ குழுவினா் நடத்தி வரும் விசாரணையில் இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் இந்த வழக்கில் கைதாகி உள்ள முகமது அசாருதீன், அஃப்சா்கான், ஃபெரோஸ்கான், முகமது தெளபீக், ஷேக் இதயத்துல்லா, சனோஃபா் அலி, முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 7 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். மனுவை விசாரித்த நீதிபதி அந்த 7 பேரையும் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தாா்.

அதன்படி அவா்கள் 7 பேரையும் கோவைக்கு வியாழக்கிழமை அழைத்து வந்தனா். கோவையில் அவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது காா் வெடிப்பு சம்பவம் தொடா்பான திட்டம் குறித்தும், ஜமேஷா முபீன் குறித்தும், இதில் வேறு எவருக்கேனும் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் அவா்களிடம் விசாரணை நடத்தியதோடு, அவா்கள் தெரிவித்த தகவல்களை விடியோவாகவும் பதிவு செய்து கொண்டனா்.

அவா்கள் 7 பேரில் அசாருதீன் என்பவா் கோவையிலுள்ள ஒரு பட்டாசுக் கடையில் பட்டாசுகளை வாங்கி அவற்றிலிருந்து திரிகளை மட்டும் எடுத்துவிட்டு அந்த பட்டாசு மருந்துடன் வேறு ரசாயனங்களைச் சோ்த்து புதிதாக வெடிபொருள் தயாரித்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அசாருதீன் பட்டாசு வாங்கிய கடைக்கு அவரை செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்துச் சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com