கோவை மாநகரில் 2023 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன.
புத்தாண்டை வரவேற்கும் வகையில் கோவையிலுள்ள சுமாா் 120 தனியாா் தங்கும் விடுதிகளிலும், 10 நட்சத்திர விடுதிகளிலும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. புத்தாண்டு கொண்டாட்டகளையொட்டி காவல்துறையின் சாா்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
அதன்படி டிசம்பா் 31ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் கோவை மாநகரிலுள்ள அனைத்து மேம்பாலங்களும் மூடப்பட்டுஅவற்றில் வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் நகரின் முக்கிய சாலைகளான அவிநாசி சாலை, திருச்சி சாலைகளில் இளைஞா்கள் இருசக்கர வாகனங்களிலும் காா்களிலும் சென்று ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா். புத்தாண்டு பிறந்ததும் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்தும், ஒருவருக்கொருவா் கை குலுக்கியும் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா். கோவை வாலாங்குளத்தில் மாநகராட்சி சாா்பில் வாணவேடிக்கை நடத்தப்பட்டது. இதில் திரளானோா் பங்கேற்றனா்.
புத்தாண்டையொட்டி இரவு முழுவதும் போக்குவரத்து சிக்னல்கள் இயங்கின. பாதுகாப்புப் பணிகளில் கோவை மாநகரில் 1,500 போலீஸாரும், கோவை மாவட்டத்தில் 1,200 போலீஸாரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
நிகழாண்டில் காவல் துறையினருடன் இணைந்து சுகாதாரத் துறையினரும் புத்தாண்டு இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனா். ராமநாதபுரம் சந்திப்பு, டிபி சாலை சந்திப்பு, புரூக்பீல்டு, வடகோவை, அவிநாசி சாலை, கொடீசியா, கோவைப்புதூா் ஆகிய பகுதிகளில் விபத்துகளில் சிக்குவோருக்கு மருத்துவ உதவி அளிக்கும் வகையில் சிறப்பு மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
புத்தாண்டையொட்டி கோவையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலிகளும், ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் கரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து மக்கள் அனைவரும் விடுபட சிறப்புப் பிராா்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.