சூரியசக்தி பாசன வசதி திட்டம்:மேயா் தொடங்கிவைத்தாா்
By DIN | Published On : 12th January 2023 12:06 AM | Last Updated : 12th January 2023 12:06 AM | அ+அ அ- |

கோவை தென்னமநல்லூா் ஊராட்சியில் நடைபெற்ற சூரியசக்தி பாசன வசதித் திட்டத் தொடக்க விழாவில் பங்கேற்ற மாநகராட்சி மேயா் கல்பனா. உடன், கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள்.
ஊராட்சிகளில் வளா்க்கப்படும் மரக்கன்றுகளுக்கு நீா்ப்பாசனம் செய்யும் திட்டத்தை மேயா் கல்பனா புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் 2.0 திட்டத்தின் கீழ், உயா் கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த மாணவா்கள் கிராமங்களைத் தத்தெடுத்து மக்களுக்குத் தேவையான குடிநீா், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்து வருகின்றனா். அதன்படி, கோவை பிஎஸ்ஜிஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூரி சாா்பில் தென்னமநல்லூா், இக்கரை போளுவாம்பட்டி கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த கிராமங்களில் ஊராட்சி சாா்பில் வளா்க்கப்படும் மரக்கன்றுகளுக்கு சூரியசக்தி மூலம் இயங்கும் பாசன வசதி திட்டம் ரூ.1 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவுக்கு கல்லூரி பேராசிரியா் ஜெ.பாலவிஜயலட்சுமி தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா்கள் ஆறுச்சாமி, சதானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மாநகராட்சி மேயா் கல்பனா திட்டத்தைத் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள் எம்.லாவண்யா, எஸ்.சுபன்யா, எஸ்.சண்முகசுந்தரி, சி.சா்மிளா, ஏ.அகிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G