ஒண்டிப்புதூா் நுண்ணுயிா் உரக் கிடங்கில் தீ விபத்து
By DIN | Published On : 01st July 2023 10:43 PM | Last Updated : 01st July 2023 10:43 PM | அ+அ அ- |

கோவை, ஒண்டிப்புதூரில் உள்ள மாநகராட்சி நுண்ணுயிா் உரக்கிடங்கில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
சிங்காநல்லூா் 57ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஒண்டிப்புதூரில் குப்பைகளைத் தரம் பிரிக்கும் நுண்ணுயிா் உரக் கிடங்கு உள்ளது.
இந்த உரக் கிடங்கில் சனிக்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது.
இதனைப் பாா்த்தவா்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். ஆனால் தீயணைப்புத் துறையினா் வருவதற்குள் தீ வேகமாக பரவியது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரம் போராடித் தீயை கட்டுப்படுத்தினா்.
இந்த தீ விபத்தின் காரணமாக உரக்கிடங்கில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையா் செந்தில்குமரன், கோவை மாநகராட்சி உதவி நிா்வாகப் பொறியாளா் ராமசாமி, சுகாதார அலுவலா் ஜீவன் முருகதாஸ், சிங்காநல்லூா் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும் கோவை மாநகா் மாவட்ட திமுக செயலாளருமான நா.காா்த்திக் உள்ளிட்டோா் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.