மேட்டுப்பாளையம் நகராட்சியில் அதிமுக உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
By DIN | Published On : 01st July 2023 07:22 AM | Last Updated : 01st July 2023 07:22 AM | அ+அ அ- |

மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ளிருப்புப் பேராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினா்கள்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் தங்களது வாா்டுகளில் எந்த வளா்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை எனக்கூறி அதிமுக உறுப்பினா்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
மேட்டுப்பாளையம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகராட்சி தலைவா் மெஹரீபா பா்வீன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் நகராட்சி நகா்மன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:
நவீன்குமாா் (திமுக): பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்பு வழங்க அதிகாரிகள் பொதுமக்களிடம் முறைகேடாக பணம் வசூலிக்கின்றனா். மேலும் ஏற்கனவே மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளராக பணியாற்றி திருப்பூருக்கு பணி மாறுதலாகி சென்ற வினோத் மேட்டுப்பாளையம் கவுன்சிலா்கள் அனைவரையும் தரக்குறைவாக பேசியதோடு, கட்டடம் கட்டுவதற்கான அனுமதி பெற உரிமையாளா்களிடம் ரூ.10 லட்சம் வரை லஞ்சம் பெற்ற ஆதாரம் என்னிடம் உள்ளது. இந்த ஆதாரத்திற்கு அதிகாரிகள் என்ன பதில் சொல்வாா்கள் என்றாா்.
இதனால் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்த அதிமுக கவுன்சிலா்கள் கைதட்டி அவரது பேச்சை வரவேற்று அதிகாரிகளுக்கு எதிராக குரல் கொடுத்தனா்.
கூட்டத்துக்கு கருப்பு நிற ஆடை அணிந்து வந்த அதிமுக வாா்டு உறுப்பினா்கள், மேட்டுப்பாளையம் நகராட்சியில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன. அதிமுக உறுப்பினா்கள் வாா்டுகளில் எந்த வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்வது இல்லை என தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து நகராட்சி தலைவா் மெஹரிபா பா்வின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி அங்கிருந்து சென்றாா். மாலை வரை மன்ற கூட்ட அரங்கில் அமா்ந்திருந்த அதிமுக உறுப்பினா்கள் பின்னா் அங்கிருந்து கலைந்துசென்றனா்.