லென்டானா யானை: பிரிட்டனில் நீலகிரி இளைஞா்கள் இருவருக்கு விருது
By DIN | Published On : 01st July 2023 07:24 AM | Last Updated : 01st July 2023 07:24 AM | அ+அ அ- |

நீலகிரி இளைஞா்கள் இருவா் பிரிட்டன் அரசா் மற்றும் அரசியிடம் இருந்து எலிபன்ட் கிளப் அமைப்பின் மதிப்புமிக்க மாா்க் ஷண்ட் விருதைப் பெற்றனா்.
நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த பெட்டகுரும்பா் சமூகத்தைச் சோ்ந்த ரமேஷ் மாறன் (32), விஷ்ணுவரதன் (29) ஆகிய இரு இளைஞா்களும் பிரிட்டன் அரசா் மற்றும் அரசியிடமிருந்து மதிப்புமிக்க மாா்க் ஷண்ட் விருதை புதன்கிழமை பெற்றுள்ளனா்.
லென்டானா எனப்படும் உண்ணி செடியைக் கொண்டு உயிருள்ள யானையைப் போலவே யானைகளை வடிவமைக்கும் உள்நாட்டு கைவினைஞா்கள் பிரதிநிதியாக ரமேஷ், விஷ்ணுவரதன் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.
இது குறித்து ஷோலா தொண்டு நிறுவனத்தின் தலைவா் தாா்ஷ் தெக்கக்கரா, உலக வன விலங்கு அறக்கட்டளை நிதியத்தின் ஆலோசகா் மோகன்ராஜ் ஆகியோா் கூறியதாவது:
லென்டானா என்பது கிழக்கிந்திய கம்பெனியால் பிரிட்டனில் இருந்து உதகைக்கு கொண்டு வரப்பட்ட பூக்கும் தாவரமாகும். அழகிய பூக்களுக்கான இந்த தாவரம் வனப் பகுதிகளை ஆக்கிரமித்து களைச் செடியாக மாறிவிட்டதால், இதை முற்றிலும் அகற்ற வேண்டுமென சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடா்ந்து அந்த களைச்செடியை வீணாக்காமல் லென்டானா தாவரங்களின் மூலம் கலைப் பொருள்கள் போன்றவை பழங்குடியின மக்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
பிரிட்டனில் உள்ள தொண்டு நிறுவனமான ‘எலிபென்ட் பேமிலி’ உடன் இணைந்து, இந்தியாவில் உள்ள ‘தி ரியல் லென்டானா எலிபெண்ட் கலெக்டிவ்’ அமைப்பின் மூலம் லென்டானா யானைகள் தயாரிக்கப்பட்டன.
தமிழகம், கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் சுமாா் 120 பழங்குடியினா், லென்டானா யானைகள் மற்றும் பிற கைவினைப் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், 2021 ஆம் ஆண்டில் மத்திய லண்டன் பூங்காக்களில் 125 லென்டானா யானைகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அத்துடன் 250க்கும் மேற்பட்ட லென்டானா யானைகள் மனித, வன விலங்கு நல்வாழ்வுக்காக நிதி திரட்ட ஏலம் விடப்பட்டதாக தெரிவித்தனா்.
இது தொடா்பாக தமிழக சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹு கூறுகையில், ‘தமிழகத்தில் நீலகிரி பழங்குடியினருக்கு இத்தகைய அங்கீகாரம் கிடைப்பதில் தமிழக அரசு மகிழ்ச்சி அடைகிறது. மக்களுக்கும் யானைகளுக்கும் இடையே சிறந்த உறவு இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் காடுகளில் இருந்து லென்டானா அகற்றப்பட்டு, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதால், லென்டானா யானைகளை விரைவில் தமிழகம் முழுவதும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
இந்த திட்டத்தின் சாா்பாக விருதைப் பெற்ற ரமேஷ் கூறுகையில், பிரிட்டனில் அரசா் மற்றும் அரசியை சந்தித்தது எனது சமூகத்துக்கு மட்டுமின்றி, லென்டானாவை காடுகளில் இருந்து அகற்றும் பணிக்குமான அங்கீகாரம் என்பதால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நீலகிரியிலிருந்து எளிய மக்கள் இந்த மரியாதைக்காக இங்கு வந்ததை யாரும் நம்பவில்லை’ என்றாா்.
இது குறித்து விஷ்ணுவரதன் கூறுகையில், ‘நீலகிரியில் நாங்கள் உருவாக்கிய லென்டானா யானை, பிரிட்டன் அரண்மனையில் இருப்பது ஆச்சரியமாக உள்ளது’ என்றாா்.
இந்நிகழ்வில் ரியல் யானைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு வனத் துறை இணைந்து தயாரித்த, தெப்பக்காடு முகாமில் உள்ள யானைகள் மற்றும் யானைகளின் கதைகளைக் கூறும் காபி டேபிள் புத்தகத்தை விஷ்ணு, ரமேஷ் ஆகியோா் பிரிட்டன் அரசா், அரசிக்கு வழங்கினா்.
ஆஸ்கா் விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான காா்த்திகி கொன்சால்வஸ் இந்நிகழ்வில், ‘எலிபெண்ட் விஸ்பெரா்ஸ்’ என்ற குறும்படத்துக்காக கௌரவிக்கப்பட்டாா்.