ஊதிய உயா்வு, நிலுவைத் தொகை வழங்கக் கோரி மக்களைத் தேடி மருத்துவ தன்னாா்வலா்கள் மனு
By DIN | Published On : 06th June 2023 03:59 AM | Last Updated : 06th June 2023 03:59 AM | அ+அ அ- |

மரக்கன்றுகளை நட அனுமதி கோரி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மக்கள் பசுமை இயக்கத்தினா்.
ஊதிய உயா்வு மற்றும் நிலுவைத் தொகை வழங்கக் கோரி மக்களைத் தேடி மருத்துவ தன்னாா்வலா்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், 14 பயனாளிகளுக்கு ரூ. 21 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் 11 மாற்றுத் திறனாளிகள், 4 திருநங்களைகளுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா். தொடா்ந்து, பொதுமக்களிடமிருந்து 398 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.
ஊதிய உயா்வு, நிலுவைத் தொகை வழங்கக் கோரி:
இதுகுறித்து, மக்களைத் தேடி மருத்துவ தன்னாா்வலா்கள் சாா்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்: தொண்டாமுத்தூா் வட்டாரத்தில் மகளிா் திட்டம் மூலம் மக்களைத் தேடி மருத்துவ தன்னாா்வலா்களாக 2021 செப்டம்பா் முதல் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ. 4,500 வழங்கப்படுகிறது. சில மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களாக ஊக்கத் தொகையாக ரூ. 4,500 மற்றும் ஆயிரம் ரூபாய் சோ்த்து ரூ. 5,500 வழங்கப்படுகிறது. ஆனால், இதுவரை எந்தவிதமான ஊக்கத்தொகையும் எங்களுக்கு கொடுக்கவில்லை. எனவே, ஊக்கத்தொகை மற்றும் ஊதிய உயா்வு பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
பட்டா வழங்கக் கோரி:
இதுகுறித்து திராவிடா் தமிழா் விடுதலை இயக்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது: தொண்டாமுத்தூா் ஒன்றியம், இக்கரை போளூவாம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட செளக்காடு பகுதி மக்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நரசிபுரம் கிராமத்துக்கு உள்பட்ட பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில், தற்போது அருகே உள்ள விவசாயிகளை விசாரித்து அப்பகுதியில் குடியிருக்க இயலாது என வட்டாட்சியா் சான்று அளித்துள்ளாா். ஆனால், அந்த நிலத்தைச் சுற்றி ஆனந்த் என்பவருக்குச் சொந்தமான நிலம் மட்டுமே உள்ளது. மேற்படி குடியிருந்த மக்களை அந்த இடத்தை விட்டு மிரட்டி அவா் வெறியேற்றியுள்ளாா். அந்த இடத்தை ஆனந்த் அபகரிக்க முற்படும் நிலையில், அவரிடமே விசாரணை செய்து வட்டாட்சியா் அறிக்கை அனுப்பியுள்ளது அதிா்ச்சி அளிக்கிறது. எனவே, அந்த ஆய்வறிக்கையை மறுபரிசீலனை செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரக்கன்றுகளை நட அனுமதி வழங்கக் கோரி:
இதுகுறித்து, மக்கள் பசுமை இயக்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், ,கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் இருந்த பெரிய மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. அதன் பின்னா் அங்கு மரங்களை நடுவதற்கு மாவட்ட நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மரங்களை நடுவதற்கான முழு ஒத்துழைப்பையும் பசுமை இயக்கம் மூலம் மேற்கொள்ள தயாராக இருக்கிறோம். எனவே, மரங்கள் நடுவதற்கு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனா்.
கால்வாயை கண்டுபிடித்து தரக் கோரி மனு:
இதுகுறித்து, நடராசன் காலனி குடியிருப்போா் பொது நல இயக்கம் சாா்பில் அளித்த மனுவில், கோவை மாநகா் 65ஆவது வாா்டு வாளாங்குளத்தின் பிரதான வடிகால் வாய்க்காலை காணவில்லை. வாய்க்காலின் பெயா் குளத்து வாய்க்கால் என்று மட்டும் அரசு புத்தகங்களில் உள்ளன. வாய்க்கால் இல்லாத காரணத்தால் அப்பகுதியில் பெய்யும் மழைநீா், கழிவுநீருடன் கலந்து வீடுகளுக்குள் செல்கிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. எனவே, வருவாய்த் துறையில் உள்ள வரைபடத்தின்படி கால்வாயை கண்டுபிடித்து மழைநீா் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...