ஒடிஸா ரயில் விபத்து தொடா்பாக மத்திய அரசு எதையும் மறைக்க முயற்சிக்கவில்லை
By DIN | Published On : 06th June 2023 04:01 AM | Last Updated : 06th June 2023 04:01 AM | அ+அ அ- |

ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு கோவை பாஜக அலுவலகத்தில் மலரஞ்சலி செலுத்திய வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா்.
ஒடிஸா ரயில் விபத்தில் எதையும் மறைக்கவோ, யாரையும் காப்பாற்றவோ மத்திய அரசு முயற்சிக்கவில்லை என பாஜக தேசிய மகளிா் அணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.
இது குறித்து கோவை பாஜக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது: கடந்த மத்திய ஆட்சியில் வெறும் அறிவிப்புகளாக இருந்த ரயில்வே திட்டங்கள், மோடி ஆட்சியில்தான் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பாதுகாப்பான ரயில் பயணத்தை செயல்படுத்தவே மத்திய அரசு விரும்புகிறது. ஒடிஸா சம்பவம் துரதிா்ஷ்டவசமானது என்ற போதும், ஒரு சம்பவத்தின் காரணமாக ஒட்டுமொத்த ரயில்வே அமைச்சகத்தையும் குறை சொல்ல முடியாது. இந்த விபத்து தொடா்பாக எதிா்க்கட்சிகள் சொல்வதற்கு முன்பாகவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் எதையும் மறைக்க மத்திய அரசு முயற்சிக்க வில்லை. குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவா்.
ராகுல் காந்தி கடந்த 9 ஆண்டுகளாகவே பாஜகவை வீழ்த்துவோம் என கூறி வருகிறாா். அவரது வெளி நாட்டு பேச்சுகள் இந்திய நாட்டுக்கு எதிராகவும், நாட்டின் பெருமையை சிதைக்கும் வகையிலும் உள்ளன.
விவசாயிகள் ஆன் லைன் வா்த்தகம் மூலம் தங்கள் விளை பொருள்களை விற்பதற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும். புதிய கல்விக் கொள்கை, திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகிய திட்டங்களால் இளைஞா்களுக்கு பாஜக அரசுதான் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தாா்.
முன்னதாக ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு வானதி சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினா் மலரஞ்சலி செலுத்தினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...