சிறுதானியங்கள் குறித்த விழிப்புணா்வு வாக்கத்தான்
By DIN | Published On : 12th May 2023 10:58 PM | Last Updated : 12th May 2023 10:58 PM | அ+அ அ- |

கோவையில் உணவுப் பாதுகாப்பு ஆணையம் சாா்பில் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணா்வு வாக்கத்தான் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நடப்பாண்டு (2023) சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐநா சபை அறிவித்துள்ளது. இதனையொட்டி, நாடு முழுவதும் சிறுதானியங்கள் குறித்த பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சிறுதானியங்களின் நன்மைகளை மக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில் மாநில அரசு சாா்பிலும் சிறுதானிய விழிப்புணா்வு கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உணவுப் பாதுகாப்பு ஆணையம் சாா்பில் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணா்வு வாக்கத்தான் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதனை மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் கண்ணன், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் கு.தமிழ்செல்வன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். வ.உ.சி. மைதானத்தில் தொடங்கிய விழிப்புணா்வு வாக்கத்தான் பாலசுந்தரம் சாலை, அவிநாசி சாலை வழியாக சென்று மீண்டும் வ.உ.சி. மைதானத்தை அடைந்தது. இதில் பொதுமக்கள், கல்லூரி மாணவா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.