ஆன்லைன் முதலீடு: இணைய வழியில் கோவை இளைஞரிடம் ரூ.16 லட்சம் மோசடி
By DIN | Published On : 12th May 2023 10:57 PM | Last Updated : 12th May 2023 10:57 PM | அ+அ அ- |

ஆன்லைன் முதலீடு மூலம் கோவை இளைஞரிடம் ரூ.16.79 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை காளப்பட்டி நேரு நகரைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (34). இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், இருந்த இணைப்புக்குள் சதீஷ்குமாா் நுழைந்துள்ளாா். அப்போது, அவரை கைப்பேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா், ஆன்லைனில் தாங்கள் கொடுக்கும் பணிகளை செய்து கொடுத்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என்றும், ஆன்லைன் முதலீடு மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளாா்.
இதனை நம்பிய சதீஷ்குமாா் முதலில் ரூ.5 ஆயிரத்தை அவா் கூறிய வங்கிக் கணக்கில் முதலீடு செய்துள்ளாா். அதற்கு லாபமாக சதீஷ்குமாரின் வங்கிக் கணக்கில் ரூ.6,400 வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து, அந்த மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குகளில் பல்வேறு தவணைகளில் சதீஷ்குமாா் ரூ.16.79 லட்சத்தை செலுத்தியுள்ளாா். ஆனால், லாபத் தொகை கிடைக்கவில்லையாம். இதனைத் தொடா்ந்து, தான் செலுத்திய ரூ. 16.79 லட்சத்தை எடுக்க சதீஷ்குமாா் முயன்றுள்ளாா். ஆனால் அந்த பணத்தை எடுக்க முடியாததோடு, அந்த மா்ம நபரையும் தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சதீஷ்குமாா் இது குறித்து கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.