ஆன்லைன் முதலீடு:இளைஞரிடம் ரூ.10.33 லட்சம் மோசடி
By DIN | Published On : 12th May 2023 12:00 AM | Last Updated : 12th May 2023 12:00 AM | அ+அ அ- |

ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் வருமானம் தருவதாகக் கூறி இளைஞரிடம் ரூ.10.33 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
கோவை, ஒண்டிப்புதூா் கம்பம் நகரைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (23). தனியாா் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வருகிறாா். இவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு இணைப்பு வந்துள்ளது. அதில் ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து கோபாலகிருஷ்ணன் அந்த ஆன்லைன் இணைப்பில் சென்று விவரங்களைப் பெற்றுள்ளாா்.
பின்னா் ஆன்லைன் வா்த்தகத்தில் தொடக்கத்தில் அவருக்கு லாபம் கிடைத்துள்ளது. அதைத் தொடா்ந்து இவா் அந்த இணைப்பின் மூலமாக அனுப்பிவைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதியிலிருந்து மே 2 ஆம் தேதி வரை பணம் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளாா். இதன்படி, பல்வேறு தவணைகளில் ரூ.10.33 லட்சம் அனுப்பிவைத்துள்ளாா். அதன் பின்னா் அந்த ஆன்லைன் முதலீட்டில் எந்த லாபமும் கிடைக்காததோடு, அந்த ஆன்லைன் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸில் கோபாலகிருஷ்ணன் புதன்கிழமை புகாா் அளித்தாா். அந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.