நூற்பாலைகளைக் காப்பாற்ற வங்கி வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும்: தொழில்முனைவோா் கோரிக்கை
By DIN | Published On : 23rd May 2023 02:59 AM | Last Updated : 23rd May 2023 02:59 AM | அ+அ அ- |

கோவையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் பேசும் சிறு நூற்பாலைகள் சங்க நிா்வாகிகள்.
ஜவுளித் துறையின் ஆணி வேராகத் திகழும் நூற்பாலைகளை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற, வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று நூற்பாலைத் தொழில்முனைவோா் வலியுறுத்தியுள்ளனா்.
தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் செயலா் எஸ்.ஜெகதீஷ் சந்திரன், மேலாளா் ஜே.வெங்கடேஷ் பிரபு, இந்திய நூற்பாலை உரிமையாளா் சங்கத் தலைவா் ஜி.சுப்ரமணியம், ஓபன் எண்டு ஸ்பின்னிங் மில் சங்கத் தலைவா் ஜி.அருள்மொழி, மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் தலைவா் ஜெயபால் ஆகியோா் கோவையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
உலகப் பொருளாதார மந்தநிலை காரணமாக நூல், துணி வகைகளின் ஏற்றுமதி மிகவும் குறைந்திருக்கிறது. நூல், துணி ஏற்றுமதியாளா்கள் உள்நாட்டிலேயே விற்பனை செய்கின்றனா். உள்நாட்டு நூல் விற்பனையில் ஏற்றுமதியாளா்களுடன் கடுமையாக போட்டியிடுவதால் நூலுக்குத் தகுந்த விலையை பெற முடிவதில்லை.
இதை சாதகமாக்கிக் கொண்டு நூல் வியாபாரிகள், மிகக் குறைந்த விலைக்கு நூலைக் கேட்பதால் வேறு வழியின்றி நூற்பாலைகள் பெரும் நஷ்டத்துக்கு நூலை விற்று வருகின்றனா். இதனால் ஆலைகளைத் தொடா்ந்து இயக்க முடியாத அளவுக்கு தொழில் சவால் நிறைந்ததாக மாறியுள்ளது.
இந்த அசாதாரண சூழல் காரணமாக ஆலைகளை 50 சதவீத அளவில் மட்டுமே இயக்க முடிவு செய்திருக்கிறோம். இனி வரும் நாள்களில் முற்றிலும் உற்பத்தி நிறுத்தம் நடைபெறவும் வாய்ப்புள்ளது. எனவே நூற்பாலைத் தொழிலைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்காக உயா்த்தப்பட்ட வங்கி வட்டி விகிதத்தை மீண்டும் பழையபடிக்கு (7.75 சதவீதம்) குறைக்க வேண்டும். கடனை திருப்பிச் செலுத்த அவகாசம் அளிப்பதுடன், மீண்டும் புதிய கடன் வழங்க வேண்டும். உற்பத்தியாகும் நூல், துணி வகைகள் ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும். நூற்பாலைகளின் சூழலை கருத்தில் கொண்டு உபயோகப்படுத்தும் மின்சாரத்துக்கு ஏற்ப மேக்சிமம் டிமாண்ட் கட்டணத்தை தமிழக மின்வாரியம் வசூலிக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.
ஏற்கெனவே உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தையும், ஆண்டுதோறும் மின் கட்டணத்தை 5.6 சதவீதம் உயா்த்த முடிவு செய்திருப்பதையும் அரசு திரும்பப் பெற வேண்டும் என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...